Header Ads



யாழ்ப்பாணத்தில் போலி வேலைவாய்ப்பு கும்பல் வசமாக மாட்டியது

யாழ் குடாநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி இளைஞர்களை ஏமாற்ற முனைந்த கும்பலொன்று பொதுமக்களின் விழிப்புணர்வால் கைது செய்யப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அக்கியூரேட் சர்வதேச பாடசாலை குடாநாட்டில் அமையவுள்ளதாகவும், இதற்கென ஆசிரியர்கள், சேர்க்கப்படவுள்ளதாகவும் இதற்கான நேர்முகத்தேர்வு இன்று செவ்வாய்கிழமை யாழ்.பிரதான வீதியில் நடைபெறவுள்ளதாகவும் குடாநாட்டிலுள்ள உதயன் பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இதனை நம்பி சுமார் 100வரையான இளைஞர்களும், யுவதிகளும். யாழ்.பிரதான வீதியில் உள்ள நேர்முகத்தேர்வு நடைபெறும் இடத்திற்கு சென்றிருந்தனர், அங்கு பொருத்தமே இல்லாமல் வீட்டின் கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட நிலையில், நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் க.பொ.த சாதாரணதரம் சித்தியெய்தாதவர்களும், நேர்முகத்தேர்வில் சித்தி பெற்றுள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டாயிரத்து 500ரூபா பணமும் பெறப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த இளைஞர்கள் சிலர். நேர்முகத்தேர்வு நடத்தியவரை வீட்டினுள் வைத்து பூட்டியதுடன், பொலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த பொலிஸார் விடயத்தை விசாரித்தபோதே குறித்த நிறுவனம் மோசடி நிறுவனம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நேர்முகத்தேர்வு நடத்தியவருக்கு தன்னுடைய கம்பனியின் விலாசமோ, முதலாளியின் தொலைபேசி இலக்கமோ கூட தெரியாது.

இதில் மேலும் சிலர் 25 ஆயிரம் ரூபா வரையிலும் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது இது தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை குறித்த கம்பனியின் முதலாளி ஏற்கனவே குடாநாட்டில் பல மோசடிகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.