சமூகத்தை நெறிப்படுத்துவதில் முஸ்லிம் ஊடகத்தின் பங்கு அவசியமானது
முஸ்லிம் சமூகத்தில் ஊடகத்தின் பங்களிப்பு கூடுதலாக இருக்க வேண்டுமென சமூக ஆர்வலரும், சட்டத்தரணியுமான ஏ.எம். ஜிப்ரி தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
முஸ்லிம் சமூகத்தில் ஊடகத்தின் பங்களிப்பு தற்பொழுது இருப்பதனை விட கூடுதலாக இருக்க வேண்டும். ஏனெனில், புத்திஜீவிகளோ, பெற்றார்களோ ஆசிரியர்களோ சமூகத்தை வழிநடத்துவதில் தம்முடைய உரிய பங்களிப்பைச் செய்யாமல் இருக்கிறார்கள். இதனை நெறிப்படுத்துவதில், வழிநடாத்துவதில் முஸ்லிம் மீடியாவுக்கு அதிகூடிய பங்கிருப்பதாக நான் நினைக்கிறேன்.
முஸ்லிம் சமூகத்தின் எல்லாப் பகுதிகளையும் நெறிப்படுத்தும் சக்தி ஊடகத்திற்கு இருக்கின்றது. அறிஞர் சித்திலெப்பை கல்வி மறுமலர்ச்சிக்கு பாவித்த பத்திரிகை எனும் ஆயுதத்தை நாம் இன்றும் பாவிக்கலாம். அது இன்னும் கூர்மையாக இந்தக் காலத்தில் பாவிக்கப்படலாம். சமூக மறுமலர்ச்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அது மீடியாவிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். எமது சமூகத்தினர் ஏனைய சமூகத்தவர்களைப் போன்றவர்களல்லர். அவர்கள் உழைத்து விட்டு மாலையில் வீடு செல்லும்போது ஒரு பத்திரிகை வாங்கிச் செல்வார்கள். ஆனால், எம்மவர்கள் Short Eats வாங்கிச் செல்லும் மனநிலையில் உள்ளவர்கள். அந்த மனப்பக்குவத்தை நீக்குவதற்கு நீண்ட உழைப்பு தேவை. மக்கள் மத்தியில் உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும். அது நீண்ட காலத்தில் மக்கள் மத்தியில் கருத்துப் புரட்சியொன்றை ஏற்படுத்த வழிவகுக்கும்.
இன்று மக்களின் சிந்தனை வெகுவாக மாறியிருக்கின்றது. அவர்கள் நிறைய உழைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களே தவிர, சமூகத்திற்கான, அடுத்த மனிதனுக்கான தங்களுடைய கடமையைப் பற்றி யோசிக்கிறார்கள் இல்லை. ஆனால், நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் தாம் உழைத்த சொத்துகளை பள்ளிவாசலுக்கு, மத்ரஸாவுக்கு, கல்விக் கூடங்களுக்கு என அர்ப்பணித்தார்கள். ஆனால் அவை இன்று சரியான முறையில் பரிபாலிக்கப்படு வதில்லை என்பதும் சொல்லப்பட வேண்டிய ஒரு உண்மையாகும். எனவே முஸ்லிம் ஊடகம் சமூகத்தில் ஒவ்வொரு பெயரால் நடைபெறுகின்ற அநியாயங்களை, அட்டூழியங்களை எடுத்துக் காட்ட தைரியத்துடன் முன்வர வேண்டும்.
மேலும் என்னைப் பொறுத்தவரை கல்வியும் ஊடகமும்தான் நாம் முக்கியமாக முதன்மைப் படுத்திக் கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்களாகும். ஏனெனில், நாம் எங்கு இருக்கிறோம்? எம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் என்ன? என்பதனை மக்கள் உணராமல் இருக்கிறார்கள். எனவே சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கின்ற பிரச்சினைகள் வெளிக்காட்டப்பட வேண்டும். இஸ்லாமிய உணர்வும் சமூக உணர்வும் ஒரு சேரப் பெற்றவர்கள் இந்த சமூகத்திற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள். ஏனெனில், சமூகத்தின் தலைமைத்துவ இடைவெளி இன்னும் நிரப்பப்படவில்லை.

Post a Comment