Header Ads



இம்முறை வாய்ப்பு கிட்டாதவர்கள் ஹஜ் செல்ல நிய்யத்து செய்யவும் - பௌஸி

இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்காதவர்களக்கு அடுத்த வருடம் முன்னுரிமை வழங்கப்படுமென ஹஜ் விவகாரத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். எதிர்பார்க்கப்பட்ட அளவு விசா கிடைக்காமையால் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு கிட்டாமை குறித்து தாம் கவலையடைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 மக்காவுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் அமைச்சர் பௌசி ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இம்முறை ஹஜ் செல்வதற்கு முயற்சி செய்து சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் கவலையடையத் தேவையில்லை. அடுத்தவருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு எதிர்வரும் நவம்பர் 1 ஆம் திகதி முதல் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த வருடம் இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வருடம் சவூதி அரசாங்கத்தால் 3800 ஹஜ்ஜாஜிகளுக்கான விசாக்கள் மாத்திரமே கிடைக்கப்பெற்றன. கிடைத்த விசாக்களை விட மேலதிகமாக விசாக்களைப் பெறுவதற்கு முயற்சித்தும் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதனாலேயே ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லத் தயாரானவர்களில் சிலருக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போனது.

புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றுள்ள ஹாஜிகளிடம் இருந்து முகவர்கள் மூன்று இலட்சத்து நாற்பதாயிரத்திற்கு அதிகமான பணத்தினை பெற்றிருந்தாலோ அல்லது ஹஜ் கடமையின் போது ஹாஜிகளுக்கு வழங்கப்படும் வசதிகளில் குறைபாடுகள் காணப்பட்டாலோ இன்ஷா அல்லாஹ் நாடு திரும்பியதும் முஸ்லிம் கலாசார திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்தால் மூன்று பேர் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்தி குறிப்பிட்ட முகவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவசியமானால் அவர்களுக்கான ஹஜ் முகவர் அனுமதிப்பத்திரத்தினையும் இரத்துச் செய்யத் தயங்கமாட்டேன்.

இம்முறை முதன் முதலாக மதீனா மற்றும் மக்கா பல்கலைக்கழகத்தில் உள்ள இலங்கை மாணவர்கள் இலங்கையில் இருந்து சென்றுள்ள ஹாஜிகளின் நலன்களைக் கவனிப்பதற்காக தொண்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் இவர்களிடமிருந்தும் இரகசிய அறிக்கையினை பெறவுள்ளோம். கிடைக்கப்பெறும் அவ் அறிக்கையின் மூலமும் நடவடிக்கை எடுப்போம்.

இம் முறை ஹஜ் கடமைக்காக தயாராகி சிலருக்கு செல்லமுடியாமல் போனதற்கு பொய்யான பிரசாரங்களை சிலர் செய்கின்றார்கள். இப் பிரசாரங்களில் ஹஜ் பயணம் தடைப்பட்டவர்கள் நிச்சயமாக ஈடுபடவில்லை. அவர்களுக்காக பரிந்துரை செய்தவர்கள்தான் விசமத்தனமான பிரசாரங்களைச் செய்கின்றார்கள். இவர்கள் கூறும் கருத்து உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். ஹஜ் விவகாரங்களை சந்தர்ப்பமாக வைத்து தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளப் பார்க்கின்றார்கள்.

இம் முறை ஹஜ் கடமைக்குச்சென்றுள்ளவர்கள் தேக ஆரோக்கியத்துடன் ஹஜ் கடமயை நிறைவேற்றுவதற்கும் இவர்களின் ஹஜ்ஜினை இறைவன் அங்கீகரிப்பதற்கும் பிரார்த்திப்பதோடு வாய்ப்புக் கிட்டாதவர்களுக்கு அடுத்தவருடம் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கு உறுதியான நிய்யத்தினை வைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments

Powered by Blogger.