மாதிரி வாக்காளர் இடாப்பை பார்வையிட்டு பெயர் இருப்பதை உறுதிப்படுத்த கோரிக்கை
2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மாதிரிப்படிவம் கிராம சேவகர் அலுவலகங்களில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தமது பெயர்கள் உள்ளனவா என்பதை பார்த்து உறுதிப்படுத்துமாறும் அவ்வாறு பெயர் இல்லாதவர்கள் தமது பெயர்களை பதிவு செய்ய முடியுமெனவும் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தலைக் கண்காணிப்பதற்கான கபேயின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகமட் மனாஸ் மக்கீன் தெரிவிக்கையில்,
தற்போது 2011 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு கிராம சேவகர் அலுவலகம், பிரதேச செயலகம் மற்றும் தெரிவத்தாட்சி அலுவலகம் ஆகியவற்றில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, இதனை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை பார்வையிட முடியுமென்ற நிலையில் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது வைக்கப்பட்டுள்ளது வாக்காளர் இடாப்பு மாதிரிப்படிவமாகும்.
அங்கு ஏ.பி. என இரு படிவங்கள் வைக்கப்பட்டிருக்கும் "ஏ'யில் குறித்த கிராம சேவகர் பிரிவிலிருந்து வேறு ஒரு கிராமத்துக்கு செல்வதற்காக பதிவு செய்தவர்களின் பெயர் இடம்பெற்றிருக்கும் அதுபோல் "பி'யில் குறித்த கிராம சேவகர் பிரிவில் புதிதாக உள்வாங்கப்பட்டவர்களின் பெயர்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்நிலையில் 2010 வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளவர்கள் 2011 இல் பதியப்படாமல் இருப்பின் கிராம சேவகரிடம் உள்ள மீள்பதிதல் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்கும் படிவத்தினை பெற்று தங்களது பெயரைப் பதியமுடியும்.
வடக்கு, கிழக்கு மக்கள் குறிப்பாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிவர்கள் வாக்காளர் இடாப்பு மாதிரியை பார்வையிட்டு தங்களது பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துவது அவசியமானது. இல்லாவிட்டால் உங்களது வாக்காளர் உரிமை இல்லாது போகுமென்பதால் அவதானமாக இருக்குமாறு கோருகின்றோம். இது குறித்து வடக்கு, கிழக்கில் தெளிவூட்டும் நடவடிக்கையை எமது அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. இதில் ஏதேனும் உதவி தேவைப்படின் 0114341524 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறமுடியும்.

Post a Comment