Header Ads



அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் இலங்கையில்

அமெரிக்கப் படைகளின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் அடுத்த பிரதிப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கொனன்ற் இலங்கைக்கு பயணம் ஒன்றை மேற்கோண்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சில் அவர் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவத் திட்டங்கள் குறித்தும் அதற்கு பசுபிக் கட்டளைப்பீடம் எவ்வாறு உதவிகளை வழங்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இந்தச் சந்திப்பில் பசுபிக் கட்டளைப் பீடத்தில் இலங்கை விவகாரங்களை கையாளும் அதிகாரி லெப்.கேணல் ஜெர்னிகன், அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் சூலர், பாதுகாப்புக்கான பிரதி உதவிச் செயலர் றொபேட் ஸ்கேர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எனினும் அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் கொனன்ற் இலங்கைக்கு எதற்காக பயணம் மேற்கொண்டார் என்பது பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. சீனாவுடன் இணைந்து கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு அண்மையில் இலங்கை இணங்கியிருந்த நிலையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடம் உசாரடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

No comments

Powered by Blogger.