Header Ads



நீர்கொழும்பு, மட்டக்களப்பு 2040 ஆம் ஆண்டு நீரில் மூழ்கும்

நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாநகரங்களின் 15 தொடக்கம் 20 சதவீதமான பகுதி மக்கள் கடல்மட்ட உயர்வால் 2040 ம் ஆண்டில் பாதிப்பைச் சந்திப்பார்கள் என்று மொறட்டுவ பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

'சிறிலங்கா கரையோரப் பகுதிகளுக்கான காலநிலை முன்னெச்சரிக்கை செயற்பாட்டுத் திட்டம்' என்ற மாதிரித் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டட வடிவமைப்புப் பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் பீ.கே.எஸ்.மகாநாம, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்புப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த சில பத்தாண்டுகளாக குறிப்பாக 2000 இல் காலநிலையால் ஏற்பட்ட இயற்கை அழிவுகளால் பாதிப்படைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மட்டக்களப்பில் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கானது அங்கு கடந்த 100 ஆண்டுகளில் இடம்பெற்ற மிகப்பெரிய வெள்ளப்பெருக்காக அமைந்துள்ளது.

2009 டிசம்பரில் இருந்து 2010 ஜனவரி வரை இங்கு பெறப்பட்ட மழைவீழ்ச்சியால் மக்களின் வாழ்வு மற்றும் சொத்துக்கள் என்பவற்றில் மிகப் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், கரையோர சுற்றுலாத்துறைக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 'மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இரு பிரதேசங்களிலும் பெய்த புயலுடன் கூடிய மழையால் பல உயிர்ப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன' என்றும் பேராசிரியர் மகாநாம மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.