Header Ads



புலம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம் உறவுகளின் கவனத்திற்கு..!

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.

வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்கு உட்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி 21 வருடங்கள் நிறைவடைகிறது.

வடக்கு முஸ்லிம்களுக்கெதிராக புலிகள் மேற்கொண்ட இந்த இனச்சுத்திகரிப்பை எமது உறவுகள் எங்கிருந்த போதும் ஞாபகப்படுத்தவேண்டிய ஒரு தேவையுள்ளது. இவ்வாறான ஞாபகமூட்டல் எமது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் மேற்கொண்ட கொடூரங்களை இந்த உலகமும், எமது இளம் சந்ததியும் அறிந்துகொள்ள பெரிதும் உதவும்.

பெருநாள் வந்தால் பித்ரா அரிச கொடுப்பதற்காக பணமும், ஹஜ்ஜுப் பெருநான் வந்தால் குர்பான் கொடுப்பதற்காக பணமும் சேர்த்து அதனை இணையத்தளத்திலும், பேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்துவிட்டால் போதும் என்ற நிலைப்பாட்டிலிருந்து எமது புலம்பொயர்ந்த முஸ்லிம் உறவுகளும் அமைப்புக்களும் மீளவேண்டிய கட்டாயம் உள்ளது.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுவதற்கு சர்வதேச சமூகம் தயாரில்லை என்ற செய்தியை பொருளாதார அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பகிரங்கமாகவே தெரிவித்துவிட்டார். இந்நிலையில் வடக்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரத்தை சர்வதேச மயப்படுத்தவேண்டியுதும், அதற்கான பிரச்சாரங்களிலும் ஈடுபடவேண்டிய கடமையை சுமந்தவர்களாக உள்ளனர்.

அந்தவகையில் செடோ, லங்கா முஸ்லிம் இணையம், யாழ் முஸ்லிம் வலைத்தளம் மற்றும் முஸ்லிம் சார்பு அச்சு ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு நிகழ்வை ஞாபகப்படுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடுகளை செய்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டியவை.

இதுபோன்ற நிகழ்வுகைள வெளிநாடுகளில் வதியும் வடக்கு முஸ்லிம்களும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்பதே எமது கோரிக்கை. உள்ளுரில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளைவிட வெளிநாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் இதுபோன்ற நிகழ்வுகள் நிச்சயம் சர்வதேச மட்டத்தில் சிறு விழிப்பையேனும் ஏற்படுத்தும்.

புலம்பெயர்ந்த யூத சமூகம், குர்திய சமூகம், தமிழ் சமூகம் என்பன தமது சமூகங்களுக்கெதிராக நிகழ்த்தப்பட்ட சிறு அக்கிரமங்களைக்கூட நிகழ்வுகளாக நடத்திக்காட்டி சர்வதேச சமூகத்தின் கவனத்தையும், ஊடகங்களையும் கவனத்தையும் ஈர்க்கும் நிலையில் ஏன் எம்மவர்களால் இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்திக்காட்ட முடியாமல் உள்ளது என்பதற்கு புலம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம் உறவுகள் பதில் சொல்லியாக வேண்டும்.

குறிப்பாக லண்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் புலம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் ஓரளவு அதிகமாகவே வாழ்கின்றனர். எனவே இந்நாடுகளில் குறித்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது சாத்தியம் கூடிய ஒன்றாக இருக்குமென்பது எமது நம்பிக்கை

இந்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்திக்கொள்ளுவது புலம்பெயர்ந்துள்ள வடக்கு முஸ்லிம்களின் முன்னுள்ள பிரதான கடைமையாகிறது. ஆம், வடக்கு முஸ்லிம்களும், அவை சார் அமைப்புக்களும் வடக்கு முஸ்லிம்கள் புலிகளின் இனச்சுத்திகரிப்புக்குள்ளான 21 வருட நிறைவை உரியவகையில்நினைவு கூறுவார்கள் என்று நம்புவோம்..!!

No comments

Powered by Blogger.