Header Ads



''லிபியா நவீன இஸ்லாமிய தேசமாக மலரும்'' - முஸ்தபா அப்துல் ஜலீல் அறிவிப்பு

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் நவீன ஜனநாயக நாடாக லிபியா உருவாக்கப்படும் என அந்நாட்டின் தேசிய மாற்ற கவுன்ஸிலின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் அறிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருந்த பெங்காசியில் இருந்து தலைநகர் திரிபோலி வந்தடைந்த அப்துல் ஜலீல் அங்கு முதல் முறையாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். மர்டியர் சதுக்கத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் தனது உரையை நிகழ்த்தினார். இதில் எதிர்கால லிபியா குறித்து அவர் அறிவிப்பு விடுத்தார்.

“லிபியா நவீன இஸ்லாமிய தேசமாகும். அந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். நீங்கள் எங்களுடன் இருந்து அதற்கு ஆதரவளிக்க வேண்டும். லிபிய கிளர்ச்சிக்கு தடங்கலாக செயற்படுவோருக்கு எதிராக போராடுங்கள்” என்று அங்கு கூடியிருந்த ஆதரவாளர்களுக்கு ஜலீல் குறிப்பிட்டார். முஸ்தபா அப்துல் ஜெலீல் முன்னார் முஅம்மர் கடாபி அரசின் நீதி அமைச்சராக செயல்பட்டவராவார். எனினும் அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலேயே கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து கடாபிக்கு எதிராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது நவீன லிபியாவில் பெண்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட ஜலீல், தேசிய மாற்ற கவுன்ஸிலுக்கு ஆதரவளித்த பிரான்ஸ், பிரிட்டன் உட்பட நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார். எனினும் மதச்சார்பற்றோருக்கு ஜலீல் தனது உரையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். லிபியாவில் சரீஆ சட்டமே (இஸ்லாமிய சட்டம்) முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டார்.

இதேவேளை, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முஅம்மர் கடாபி மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்தார். சிரியாவில் இருந்து இயங்கும் அல்ராய் தொலைக்காட்சி முஅம்மர் கடாபியின் செய்தியை வெளியிட்டது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஒலிநாடா மூலம் தனது செய்தியை வெளியிடவில்லை என ‘அல் ராய்’ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இதில் எமது ஆதரவாளர்கள் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள கடாபி, சாகும்வரை போராடுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் தாம் தொடர்ந்தும் லிபியாவில் யுத்த களத்தில் இருப்பதாக முஅம்மர் கடாபி கூறியதாக அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனிடையே நைகரில் தஞ்சம்புகுந்த முஅம்மர் கடாபியின் மகன் சாதி கடாபியை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.“சாதி கடாபி நைகருக்குள் நுழைந்ததை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது. அவர் தலைநகர் நியாமியில் கைது செய்யப்பட்டுள்ளார்” என அமெரிக்க அரசின் பேச்சாளர் விக்டோரியா நூலான்ட் ராய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் இதுவரை கடாபி ஆதரவாளர்கள் பலர் நைகரில் தஞ்சம் புகுந்துள்ளதாக நைகர் பிரதமர் பிரிகி ரபினி தெரிவித்துள்ளார். “முஅம்மர் கடாபியின் ஒரு மகன் உட்பட மொத்தம் 32 பேர் நைகரில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் கடாபி இராணுவத்தின் மூன்று ஜெனரல்களும் அடங்குவர்” என பிரிகிரபினி நியாமியில் நடந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 10 நாட்களில் 4 வெவ்வேறு குழுக்கள் நைகரில் தஞ்சமடைந்துள்ளதாக நைகர் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே லிபியாவின் எண்ணெய் நகரான ராஸ்லனூபாவில் கடாபி ஆதரவுப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 கிளர்ச்சியாளர்கள் பலியாகியுள்ளனர். திரிபோலியில் இருந்து கிழக்காக 600 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள ராஸ்பனூபாவில் கிளர்ச்சியாளர்களின் முன்னரங்கு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் போது ஆயுதம் தரித்த வாகனத்தில் வந்த கடாபி ஆதரவுப்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கிளர்ச்சிப்படை கூறியுள்ளது.

லிபியாவில் கடாபி கட்டுப்பாட்டில் உள்ள பானிவலீத் மற்றும் சிர்த் நகரங்களில் நேற்றைய தினத்திலும் இரு தரப்புக்கும் இடையில் மோதல் நீடித்தது. இதேவேளை சீன அரசு லிபிய கிளர்ச்சிப் படையின் தேசிய மாற்ற கவுன்ஸிலை அந்நாட்டின் அதிகாரபூர்வ அரசாக அங்கீகரித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அரச செய்திச் சேவையான ‘எக்சின்ஹோ, வெளியிட்டுள்ளது. இதன்படி ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள அனைத்து அங்கத்துவ நாடுகளும் தேசிய மாற்ற கவுன்சிலை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.