Header Ads



தலிபான்கள் அதிரடி, நேட்டோ படை கலங்கியது, உதவிக்கு போர் விமானங்கள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம், "நேட்டோ' தலைமையகம் ஆகியவற்றைக் குறிவைத்து செவ்வாய்கிழமை தலிபான்கள் பலமுனைத் தாக்குதல் நடத்தினர். இதனால் காபூல் நகரம் பெரும் பீதியில் ஆழ்ந்தது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், வாஜிர் அக்பர்கான் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள், உளவுப் பிரிவு அலுவலகங்கள் உள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகியவற்றின் தூதரகங்கள் உள்ளன. இவற்றை அடுத்து, ஆப்கன் அரசின் பல்வேறு அமைச்சகங்கள் உள்ளன.அமெரிக்கத் தூதரகத்தின் அருகில், "நேட்டோ' படையின், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (ஐ.எஸ்.ஏ.எப்.,)யின் தலைமையகம் அமைந்துள்ளது.

நண்பகல் தாக்குதல்: இந்நிலையில்  நண்பகலில், அப்பகுதியில் புகுந்த   தலிபான்கள் பாதுகாப்புப் போலீசார் மீது தாக்குதலைத் துவங்கினர். சிறிது நேரத்தில், அருகில் உள்ள அப்துல் ஹக் மைதானத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் அடுக்குமாடிக் கட்டடங்களில் புகுந்த அவர்கள், அமெரிக்கத் தூதரகத்தைக் குறிவைத்துத் தாக்கினர்.

தற்கொலை நபர்கள்:
அதேநேரம், நகரின் மேற்குப் பகுதியில் உள்ள அக்பர் கான் பகுதியில் புகுந்த தற்கொலை நபர்கள் நடத்திய தாக்குதலில் போலீஸ் ஒருவர் பலியானார். எதிர்த்து போலீசார் நடத்திய தாக்குதலில் இரு  தலிபான்கள் பலியாயினர்.அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனத் தகவல்கள் கிடைத்தன. அதேநேரம், காபூலில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும், தூதரகத்தின் இணையதளத்தோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.ஐ.எஸ்.ஏ.எப்., ஈரான் நாட்டைச் சேர்ந்த "டிவி' அலுவலகம் ஆகியவற்றின் மீதும்  தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.

போர் விமானங்கள் ரோந்து: தூதரகப் பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், பாதுகாப்புப் படை வீரர்கள்,  தலிபான்கள் பதுங்கியிருந்த இடங்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். "நேட்டோ' போர் விமானங்கள் வானில் ரோந்து சுற்றி வந்தன. மாலை நிலவரப்படி ஆப்கன் உள்துறை அமைச்சர் சாதிக் சாதிக்கி,"சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது' என்றார்.பலரக ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள்: இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதிகளிடம், கையெறி ராக்கெட்டுகள், வெடிகுண்டுகள், தற்கொலைத் தாக்குதலுக்கான உடைகள், ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பலமுறை தலிபான்கள் தாக்குதல் நடத்திய போதும், இதுதான் திட்டமிட்டு பல முனைகளில் இருந்தும் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதலுக்கு, "நேட்டோ' பொதுச் செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் பொறுப்பேற்பு: தாக்குதல் நடந்து கொண்டிருந்த நண்பகல் நேரத்தில் தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் ஐந்து தற்கொலை நபர்கள் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும் எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து சரிவரத் தெரியவில்லை.தூதரகங்கள் இருந்த பகுதியைச் சேர்ந்த அனைத்து சாலைகளும் உடனடியாக மூடப்பட்டன. அதேபோல், அரசு அலுவலகங்கள், அதிபர் மாளிகைப் பகுதி சாலைகளும் மூடப்பட்டன. கடந்த மாதம், இதே பகுதியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தை தலிபான்கள் தாக்கி 12 பேரைக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.