Header Ads



பாகிஸ்தான் போராளிகள் இலங்கை ஊடாக இந்தியாவுக்கு..? இலங்கை மறுப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையின் ஊடாகத் தமிழகத்துக்குள் நுழைகிறார்கள் என்று இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்றவற்றின் ஊடாக இந்தியாவுக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்றார் அவர்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்தியாவுக்குள் நுழைவதற்கான வழியாக இலங்கையை தீவிரவாதிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல்கள் இல்லாத நாடே கிடையாது, அமெரிக்காவிலும் அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.

இந்த ஆண்டில் இதுவரையில் 22 நாடுகளில் 279 தீவிரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. உலகின் முக்கியமான தீவிரவாத அமைப்புக்களில் பெரும்பான்மையானவை பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன என்றார். அவற்றில் அநேகமானவை இந்தியாவை இலக்கு வைத்து தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன என்றார்.

இலங்கை அரசு நிராகரிப்பு

இந்தியாவுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இலங்கையைத் தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என இந்தியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக் குறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைக்கவில்லை என்று இலங்கை அரச தரப்பினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்ததாவது, இந்திய அமைச்சர் அவ்வாறு தெரிவித்துள்ள போதிலும், எமது புலனாய்வுப் பிரிவிலிருந்து அப்படிப்பட்ட எவ்வித சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

இது குறித்து இராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் நிஹால் ஹப்பு ஆராய்ச்சி தெரிவித்ததாவது, இந்தியாவுக்குத் தெரியாமல் அங்கு தீவிரவாதிகள் பிரவேசிக்க முடியாது. அதேபோன்றே இலங்கைக்கு வெளியிலிருந்து தீவிரவாதிகள் பிரவேசித்தால் அதிகாரிகள் எதிர்ப்பாகவே இருப்பர். இந்திய அமைச்சர் தனது கருத்தையே கூறியுள்ளார். அதில் உள்ள உண்மைத் தன்மை தொடர்பாக எவராலும் உறுதிப்படுத்த முடியாது. எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு உறுதியாகப் பேணப்படும் என்றார்.

இது தொடர்பாகக் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்ததாவது, எந்தவொரு வெளிநாட்டுத் தீவிரவாதிகளும் கடல் மார்க்கமாக பிரவேசிப்பதற்கு எவ்விதத்திலும் இடமளிக்க மாட்டோம். இலங்கையைச் சுற்றிலும் பாதுகாப்பு தற்போது போன்று எதிர்காலத்திலும் அதி உயர் தரத்தில் பேணப்படும் என்றார்

No comments

Powered by Blogger.