Header Ads



யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் அவதானத்திற்கு..!

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறுவதற்கு தடையாகவுள்ள காரணிகளில் ஒன்றுதான் வேலைவாய்ப்பு குறித்த சிக்கலாகும். மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தாம் தற்போது எதிர்கொள்ளும் சிக்கலில் முதன்மையானது தொழில் இன்மையே என்றும் இதனாலேயே தாம் அரசாங்க நிவாரணத்தை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அண்மைக்காலங்களில் அதிகளவான முதலீட்டில் யாழ்ப்பாணத்தையும், அதனையணடிய பகுதிகளிலும் பெரும் தொழில் நிறுவனங்கள் புதிய நிறுவனங்களை ஆரம்பித்துள்ளதாகவும், மற்றும் பல நிறுவனங்கள் புதிய தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் யாழ் முஸ்லிம் வலைத்தளம் அறிகிறது.

உதாரணமாக காகில்ஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபா முதலீட்டில் பெரும் வணிக வளாகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைக்கும் பணியை கடந்த வியாழக்கிழமையன்று ஆரம்பித்துள்ளதாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் இம்தியாஸ் வாஹிட் தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளமானது தொழில் வாய்ப்பற்றிருக்கும் எமது முஸ்லிம் உறவுகள் குறித்த அவதானம் செலுத்தி அவர்களுக்கு தொழில்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கலாமல்லவா..?

இதுதொடர்பில் காகில்ஸ் நிறுவன பணிப்பாளருடன் தொடர்புகளை ஏற்படுத்தி எமது சகோதரா, சகோதரிகளுக்கு யாழ்ப்பாணத்தில் புதிய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது சிறந்த தெரிவாக அமையுமல்லவா..?

தென்னிலங்கையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் மேசன் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுடனும் இதுதொடர்பில நிநேகபூர்வ பேச்சுக்களை நடத்துவதன் மூலம் பல நூறு எமது இளைஞர்களுக்கு யாழ்ப்பாணத்திலேயே வேலை வாய்ப்பினை உருவாக்கிக்கொடுக்கலாம்.

இதன்மூலம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் வேலைவாய்பற்றிருக்கும், எமது உறவுகளுக்கு வேலை கிடைத்ததாகவும் இருக்கும், தென்னிலங்கையிலுள்ள எமது உறவுகள் தமது பாரம்பரிய தாயகத்தில் மீளக்குடியேறவும் இது ஊக்குவிப்பை கொடுக்கும். எனவே இதுவிடயத்தில் யாழ். களிநொச்சி முஸ்லிம் சம்மேனளம் உடனடிக்கவனம் மேற்கொள்வது சிறந்தது.

அரசியல் வாதிகளை சந்திக்கவும், மாதத்திற்கு ஒருமுறை கூட்டம்கூடவும், மாதத்திற்கு 2 தடவை தலைவர் தெரிவு மேற்கொள்ளவும், ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டை சுமத்திக் கொண்டிருக்கும் நேரங்களில் இதுபோன்ற ஆக்கபூர்வமான செயற்பாட்டிலும் ஈடுபட்டு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்ற முன்வாருங்கள் என யாழ்ப்பாணம் மற்றும் கிளநொச்சி முஸ்லிம் மக்களின் சார்பில் இந்தக் கோரிக்கையை யாழ் முஸ்லிம் வலைத்தளம் விடுக்க விரும்புகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் வேலை வாய்ப்பற்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் விபரங்களை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் திரட்டி வருவதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

No comments

Powered by Blogger.