முதற்தடவையாக ஹஜ் செல்வோருக்கே வாய்ப்பு - 340,000 ரூபாவே கூடிய கட்டணம்
ஹஜ் கடமையை நிறைவேற்றவென முதற்தடவையாக செல்பவர்களுக்கே இம்முறை முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார். அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுபவர்களிடம் 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் முகவர் நிலையங்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றவென சவூதி அரேபிய அரசாங்கம் 3800 இலங்கை முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இந்த 3800 பேருக்குரிய கோட்டாவை 110 முகவர்களுக்குப் பகிர்ந்து வழங்கியுள்ளோம். எனினும் தமக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டாவை எவரும் விற்பனை செய்ய முடியாது. மாறாக வேறொரு முகவர் நிலையத்துடன் சேர்ந்து தமக்குக் கிடைக்கப்பெற்றிருக்கும் கோட்டாவுக்குரிய ஆட்களை எடுத்து செல்ல வேண்டும்.
இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் இலங்கை ஹாஜிகளின் நலன்களுக்கென மக்காவிலும், மதீனாவிலும் இரண்டு அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த அலுவலகங்கள் கணனிமயப்படுத்தப்படும். சவூதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் இந்த அலுவலகங்களில் கடமைக்கு அமர்த்தப்படுவர்.
ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருக்கும் இலங்கையரின் பெயர், விபரங்கள், அவர் தங்கி இருக்கும் இடங்கள், அவர்கள் சென்றிருக்கும் முகவர் நிலையம், அவர்களுக்குப் பொறுப்பான முஅல்லிம் உள்ளிட்ட பல முக்கிய தகவல்கள் இந்த அலுவலகங்களில் கணனிமயப்படுத்தப்பட்டிருக்கும்.
ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்றிருப்பவர்கள் தொடர்பான விபரங்களை உடனுக்குடன் இந்த அலுவல கங்களில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த லுவகங்களைத் திறந்துவைப்பதற்காகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுவதற்காகவும் விரைவில் சவூதி அரேபியாவுக்கு பயணமாகவுள்ளேன். அதேநேரம் இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கான முதல் குழு செல்லவென அங்கு நான்கு டொக்டர்களை அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளேன் என்றார்.
Post a Comment