தாயின் கழுத்தை கம்பியால் நெரித்துக்கொன்ற மகன்கள் - யாழில் சம்பவம்
யாழ் - ஊர்காவற்றுறை இராண்டாம் வட்டாரத்தில் கம்பியால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றினுள் இருந்து மீட்கப்பட்ட வயோதிப மாதுவின் மரணத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரணமானவரின் மகனான விஸ்வலிங்கம் சிவராசா (வயது 48) மற்றும் சோமசுந்தரம் வேலாயுதம் (வயது51) ஆகிய இருவரும் ஊர்காவற்றுறை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த 26 ஆம் திகதி முதல் வீட்டிலிருந்து காணாமல் போன விஸ்வலிங்கம் இரா சம்மா (வயது85) என்பவரை அவரது உறவினர்கள் தேடிச் சென்றபோது ஊர்காவற்றுறை, காளி கோயிலடியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து இந்த இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்திசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.தலையில் பலமாகத் தாக்கப்பட்டு இடுப்பிலும் கழுத்திலும் அலுமினியக் கம்பியால் சுற்றப்பட்டு சடலம் கிணற்றில் மிதக்காத வண்ணம் இரண்டு பெரிய கற்களும் கட்டப்பட்டு இவர் கிணற்றில் வீசப்பட்டிருந்தார். இவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போதே மேற்படி சந்தேக நபர்கள் இருவர் சிக்கினர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

Post a Comment