90 வயது பாத்திமா பீவி, 4 ஆம் வகுப்பு பரீட்சை எழுதி சாதனை
படிக்க வசதியிருந்தும் நல்ல உடல் ஆரோக்கியம் இருந்தும் கல்வி கற்காமல் இருக்கும் பல பேருக்கு இடையே வயது 90 ஐ எட்டியும் உடல் தளர்ந்தும் கூட மனம் தளராமல் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவின் கேரளாவில் ஒரு மூதாட்டி நான்காம் வகுப்பு தேர்வு எழுதி பலரது பாராட்டை பெற்று சாதனை படைத்துள்ளார்.
கேரளாவில் தற்போது கல்வி கற்க வயது தடையாக இல்லை என்பதும் எவ்வளவு வயது முதிர்ந்திருந்தாலும் அவர்கள் நான்காவது ஏழாவது 10 ஆம் வகுப்பு தேர்வு எழுத முடியும் என்ற நிலை உள்ளது மட்டுமல்ல, குறைந்த பட்சம் நான்காம் வகுப்பு தேறியிருந்தால் மட்டுமே பல்வேறு அரசு சலுகைகளை பெற முடியும் என்ற நிபந்தனை உள்ளதால் பல வயது முதிர்ந்த பெரியவர்களும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி(90).இவர் சிறுவயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கூடம் சென்று கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் தற்போது வயது அதிகரித்தும் உடல் தளர்ந்துவிட்ட நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.குறைந்தது 10 ஆம் வகுப்பாவது தேர்ச்சி பெற வேண்டும் என விரும்பினார்.இதை அடுத்து அவர் தேர்வெழுத விண்ணப்பித்தார்.தொடர்ந்து அவர் வியாழன் காலை ஆலப்புழா வாடக்கனால் சலாமத்துல் திகாவான் மதரெசா பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு அரங்கில் தேர்வெழுதினார்.கண்பார்வை மங்கியிருந்ததால் வினாத்தாளை படித்து பார்க்க இயலாமல் அவதிப்பட்டார்.கண்களை குறுக்கியும் உற்றுநோக்கியும் கூட பல வாக்கியங்கள் அவருக்கு தென்படவில்லை.அதைக் கவனித்துவிட்ட அறைக் கண்காணிப்பாளர் விரைந்து சென்று அவருக்கு வினாக்களை படித்துக் காண்பித்து தேர்வெழுத உதவினார்.
தேர்வெழுதி விட்டு வெளியே வந்த அவர் மிகவும் சிறப்பாக தேர்வெழுதி இருப்பதாகவும் இதில் தேர்ச்சி பெற்ற பின் ஏழாம் வகுப்பு தேர்வெழுதவிருப்பதாகவும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.தேர்வெழுத அவர் தனது மகனுடன் தேர்வரங்கிற்கு வந்திருந்தார்.அத்தேர்வை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 142 மையங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் ஆர்வத்துடன் தேர்வெழுதினர்.அவர்களில் பலரும் 70,80 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment