புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - சட்டத்தரணி ரமீஸ்
புலம்பெயர்ந்து வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் ஒன்றுபடுவதன் மூலம் மீள்குடியேறும் முஸ்லிம்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தலாமென சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம் உறவுகளை சந்திக்கும் நோக்குடன் அண்மையில் சட்டத்தரணி ரமீஸ் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் சுவிற்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அந்த விஜயத்தின் ஒரு பகுதியாக சுவிற்சர்லாந்துக்கும் வருகை தந்திருந்த அவர் யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்கும் சிறப்பு செவ்வி வழங்கியிருந்தார். இந்ந செவ்வியை யாழ் முஸ்லிம் வலைத்தளத்திற்காக ஊடகவியலாளர் ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் மேற்கொண்டார்.
சட்டத்தரணி ரமீஸுடனான செவ்வி இங்கு சுருக்கித் தரப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் தற்போது முஸ்லிம்கள் படிப்படியாக மீளக்குடியேறி வருகின்றனர். எனினும் அவ்வாறு மீளக்குடியேறும் மக்களின் தேவைகள் மிக அதிகமாகும். குறிப்பாக மீளக்குடியேறும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரதான சவால்தான் வீடில்லா பிரச்சினையாகும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமிடத்து ஏனைய பகுதிகளில் வாழும் யாழ் முஸ்லிம்களும் மீண்டும் தமது தாயகம் நோக்கி மீளுவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே இத்தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய கடப்பாடு ஒருவகையில் புலம்பெயர்ந்துள்ள யாழ் முஸ்லிம்களை சார்ந்துள்ளது. மீளக்குடியேறிய முஸ்லிம்களின் சிறியளவிலான தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து வருகிற போதும் வீட்டு வசதி போன்ற தேவைகள் தொடர்ந்தும் சவால் மிக்கதாக காணப்படுகிறது. புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் ஒன்றுபடுவதன் மூலம் தமது சமூகத்தின் தேவைகளின் ஒரு பகுதியையாவது நிறைவேற்ற முடியுமாக இருக்கும்.
மேலும் யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி முஸ்லிம்களின் நலனை கவனத்திற் கொண்டு முஸ்லிம் சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான அமைப்புக்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. இச்சமேளனம் தனது பணிகளை தற்போது விஸ்தரித்து வருகிறது. அரச அதிகாரிகள் சம்மேளனத்துடன் அடிக்கடி தொடர்பு கொள்கின்றனர். எமது சமூகத்தின் தேவைகள் குறித்து நாங்களும் அதிகாரிகளின் கவனத்திற்கு அடிக்கடி கொண்டு செல்கிறோம். வடக்கு ஆளுநர் மேஜர் சந்திரசிறி உள்ளிட்டவர்கள் எதிர்காலங்களில் எம்முடன் தொடர்புகளை மேம்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளனர்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் கவலையளிக்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. உதாரணமாக சகோதரர் நௌவ்சாத் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை குறிப்பிடலாம். அவரின் இச்செயற்பாடு அரச அதிகாரிகளுக்கு மாத்திரமின்றி முஸ்லிம் அமைப்புகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இதுதொடர்பில் பலரும் தமது கவலையை எம்மிடம் தெரியப்படுத்தினர். தற்போதுதான் நிலைமை ஓரளவு சுமூக கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இதுபோன்ற செயற்பாடுகள் அவசியமற்றது என்பதுதான் பலரின் பொது அபிப்பிராயமாகும்.
உண்ணாவிரதம்கூட எத்தகைய லாபத்தை பெற்றுத்தந்தது என்பதில் சந்தேகமே நிலவுகிறது. இதுபோன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் மீளக்குடியேறிய யாழ் முஸ்லிம்கள் தொடர்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே சமூகம் தொடர்பிலான செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத்துபவர்கள் அதன் பின்விளைவுகளையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.
அத்துடன் யாழ் மாநகர சபையின் உதவி மேயர் விவகாரம் குறித்தும் யாழ் முஸ்லிம்களிடம் சில கேள்விகள் எழுகின்றன. உண்மையில் யாழ் மாநகர சபைக்கு உதவி மேயராக முஸ்லிம் ஒருவரை நியமிக்கும் விவகாரம் தொடர்பில் அமைச்சர்களான றிஸாத் பதியுதீன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரே அதிகம் தொடர்புட்டவர்களாவர். எனினும் இப்பதவி கிடைக்குமாயின் இதனை ஏறகவும் நாம் தயார். அதேநேரம் உதவி மேயர் பதவி கிடைக்காவிட்டாலும்கூட யாழ் முஸ்லிம் சமூகத்திற்கான எனது பணிகள் தொடருகின்றன.
யாழ் மேயருடன் உள்ள சிறந்த புரிந்துணர்வு காரணமாக யாழ் முஸ்லிம் சமூகத்தின் தேவைகளை ஓரளவேனும் நிறைவேற்றக்கூடியதாக உள்ளது. சில சிக்கல்கள் ஏற்படும் போது மேயர் முன்வந்து அதனை தீர்க்க உதவுகிறார். உதராணமாக கடந்த உல்ஹியா சயமத்தில் எமக்கு வழங்கிய உதவிகள் குறிப்பிடத்தக்கவையாக அமைந்திருந்தன எனவும் ரமீஸ் தனது செவ்வியின் போது மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment