கடைத் தொகுதி விவகாரம், யாழ் மேயருக்கு எதிராக நீதிமன்றில் மனு
யாழ்.மாநகர சபை முதல்வருக்கு எதிரான மனு ஒன்றை யாழ்.மேல் நீதிமன்றில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக அதன் துணைச் செயலாளர் சீ.வீ.கே.சிவஞானம் தாக்கல் செய்துள்ளார்.
இம் மனு மீதான பரிசீலனை அடுத்த மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டார்.
யாழ்.ஸ்ரான்லி வீதிக்கும் கஸ்தூரியார் வீதிக்கும் இடைப்பட்ட வண்ணான்குளம் பகுதியில் கட்டிடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கு யாழ். மாநகரசபை எடுத்திருக்கும் தீர்மானங்களுக்கு எதிராக யாழ்.மேல்நீதிமன்றில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜாராகி வாதத்தை முன்வைத்தார். இம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா உட்பட ஐவர் கொண்ட குழுவொன்றிற்கு மாநகரசபையினால் சகல அதிகாரங்களும் கையளிக்கப்பட வேண்டுமென்ற யாழ்.மாநகர சபையின் தீர்மானம் சட்டங்களை மீறுகின்றது. இது எந்தவொரு நிதி சார் விடயங்களிலும் மாநகரசபையின் நிதிக்குழுவால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை மீறுகின்றது. அத்துடன் கட்டிடத் தொகுதி அமைக்கப்படவுள்ள வண்ணாங்குளம் பகுதி ஓர் நிலப்பகுதி அல்ல என்பதுடன் அது சில நோக்கங்களுக்காக அரசினால் மாநகர சபைக்கு கையளிக்கப்பட்டது என்றும் அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment