ஆட்சியாளர்கள் வெளிநாடு சென்றால் கைது செய்யப்படும் அபாயம்- ஐ.தே.க
ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையை கொண்டு இலங்கையின் தலைவர்களை கைது செய்ய முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
பீபீசி சிங்கள சேவையான சந்தேசியாவிற்கு அவர் அளித்துள்ள விசேட செவ்வியின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையை தயாரித்தவர்கள் அதிகாரம் அற்றவர்களாக இருக்கலாம் ஆனால் அந்த அறிக்கை மிகவும் சக்திவாய்ந்தது.
நிபுணர் குழு அறிக்கையை வைத்துக் கொண்டு வெளிநாட்டு மனித உரிமை அமைப்புக்கள், உள்நாட்டு நீதிமன்றங்களின் உதவியுடன் இலங்கைத் தலைவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்க முடியும். அவ்வாறு பிடியாணை பிறப்பித்தால் இலங்கையின் அரசியல் தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்போர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது கைது செய்யப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கான சக்தியினை நிபுணர் குழுவின் அறிக்கை கொண்டுள்ளது. இதனடிப்படையில் பார்க்கும்போது இலங்கையின் அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எதிர்காலத்தில் வெளிநாடு செல்வது சவாலான விடயமாகவே அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment