Header Ads



"பெண்களினதும்,பெண்பிள்ளைகளினதும் கல்வியை மேம்படுத்துவோம்'


"பெண்களினதும்,பெண்பிள்ளைகளினதும் கல்வியை மேம்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் உலகக் கல்வி பிரசார செயற்பாட்டு வாரம் மே மாதம் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை அனுஷ்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டளவில் உலகில் வாழும் ஒவ்வொரு சிறுவருக்கும் வளர்ந்தவருக்கும் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படவேண்டுமென்பது கல்வி தொடர்பான மிலேனியம் இலக்குகளில் முக்கியமான ஒன்றாகும்.இந்த இலக்கினை அடைவதற்காக உலகக் கல்வி பிரசார இயக்கம் தொடர்ச்சியாக பல வேலைத்திட்டங்களை நடத்தி வருகிறது.

இவற்றில் முக்கியமானது வருடாவருடம் ஒரு முக்கிய தொனிப்பொருளை தேர்ந்தெடுத்து அந்த தொனிப்பொருளை முன்னெடுப்பதற்காக உலகக் கல்வி செயற்பாட்டு வாரம் ஒன்றினை பிரகடனப்படுத்துவதாகும்.அதன்படி இந்த வருடம் மே 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான கல்வி செயற்பாட்டு வாரத்தின் தொனிப்பொருள் பெண்களினதும் பெண்பிள்ளைகளினதும் கல்வியை மேம்படுத்துவது என்பதாகும்.

உலகில் சுமார் 72 மில்லியன் பிள்ளைகள் பாடசாலை செல்லும் வாய்ப்பை பெறவில்லை. அவர்களில் சுமார் 39 மில்லியன் தொகையினர் பெண்பிள்ளைகளாவர்.பெண்பிள்ளைகள் கல்வி பெறுவதில் பல்வேறு சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியான தடைகள் உள்ளன.அவை நீக்கப்பட வேண்டும்.சமூகமும் அரசாங்கமும் இந்த தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகவே இவ்வருடத்தில் இந்த தொனிப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கல்வியைப் பெற்றதால் சமூகத்தில் உயர் நிலையை அடைந்துள்ள பெண்களின் கதைகளைத்திரட்டி அவற்றை மாபெரும் கதை என்ற பெயரில் தொகுத்து அவற்றை பிள்ளைகளும் வளர்ந்தர்வர்களும் படிக்கச் செய்வதன் மூலம் பெண்பிள்ளைகளுடைய கல்வியால் சமூகம் பல நன்மைகளை பெறுகிறது என்ற கருத்தை முன்வைப்பது உலக கல்விப்பிரசார வாரத்தின் இன்னொரு முக்கிய நோக்கமாகும்.

இலங்கையில் பெண்களின் கல்வி சிறப்பான முன்னேற்றத்தை அடைந்திருந்தாலும் சில பகுதிகளில் பெண்பிள்ளைகள் கல்வி பெறுவதில் பல தடைகளும் சிக்கல்களும் உள்ளன.அவற்றில் போக்குவரத்து பிரச்சினை,பெண்பிள்ளைகள் மீதான துஷ்பிரயோகம்,வீடுகளில் பெண்பிள்ளைகள் கல்வி தொடர அவசியமான சூழல் இல்லாமை,பருவமடையும் பெண்பிள்ளைகளை அதிக நாட்கள் வீடுகளில் தடுத்துவைத்தல்,பெண்பிள்ளைகள் மீது பாடசாலையிலும் மற்றைய இடங்களிலும் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.இவை தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டி பெண் பிள்ளைகள் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும்.

இந்தவிடயம் குறித்த ஒரு கருத்துப்பரிமாறலை பாடசாலைகளுக்குள் ஏற்படுத்த பாடசாலை சமூகம் முன்வர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.