Header Ads



யாழ்ப்பாண தமிழரிடமிருந்தும் வேறுபடும் யாழ் முஸ்லிம்களின் தமிழ்


யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாறும், பண்பாடும் தொடர் - 44.

5  இடையின ரகரத்தைத் தொடர்ந்து வல்லெழுத்துக்கள் வரும் போது முன்னே வரும் இடையின ரகரம் மறைய மறைந்த நிலையிலேயே ஒலிக்கப்படுவதனை நாம் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

சர்க்கரை,       சக்கரை
வளர்ப்பு,         வளப்பு
பார்த்து,          பாத்து
சேர்த்தான்,   சேத்தான்

6 மொழி முதலில் வருகிற ஐகாரத்தைத் தொடர்ந்து மெல்லின மகர ஒற்று வரும்போது ஐகாரம் அகரமாகிறது

ஐம்பது, அம்பது

இவை யாவும் பொதுவான தன்மையாக உள்ளன.

யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் பேசும் வழக்கிலிருந்தும் முஸ்லிம்களின் தமிழ் வேறுபட்டு ஒலிக்கிறது.

யாழ்ப்பாணத்தார் வழக்கில் எழுவாய் முதலிலும் அதனைத் தொடர்ந்து இறுதியிலும் ஒலிக்கப்படும் வழக்கு உண்டு. இவ்வழக்கு யாழ்ப்பாணத்து முஸ்லிம்களிடத்து காணப்படுவதில்லை.

யாழ்ப்பாணத் தமிழர் வழக்கு,            முஸ்லிம்களின் வழக்கு
       கண்டநான்,                                                        கண்டேன்
       வந்தநீயே,                                                           வந்தாயா, வந்தியா
       கேட்டவர்,                                                           கேட்டார்

இதேபோல யாழ்ப்பாணத் தமிழர் வழக்கில் இங்கு பாரடா என்பது இங்கேர்ரா, இங்கேற்றா என்று ஒலிக்க முஸ்லிம்கள் தம் வழக்கில் இங்கப் பாரடா என்று ஒலிப்பர்.

உன் அம்மா என்பது கொம்மா என்றும் உன் அப்பா என்பது கொப்பா என்றும் உன் அக்கா என்பது கொக்கா என்றும் யாழ்ப்பாணத் தமிழர் ஒலிப்பர்.

இதனை முஸ்லிம்கள் முறையே உங்க உம்மா, உங்க வாப்பா, உங்க ராத்தா எனவும் ஒலிப்பர். உம்முன் என்பது அம்மாவையும், அபுன் என்பது அப்பாவையும் குறிக்கும் அரபுச் சொற்களாகும்.  உறவு முறையைக் குறிக்கும் சொற்களில் அரபு மொழி கலந்த தமிழின் செல்வாக்கை இங்கு அவதானிக்க்ககூடியதாக உள்ளது.

தொலைவுக்கா என்ற பதத்தை யாழ்ப்பாணத் தமிழர் துலைக்கே என்று ஒலிக்க முஸ்லிம்கள் தொலைக்கா எனவே வினவுவர். யாழ்ப்பாணத் தமிழ்மக்கள் வழக்கில் உகரச் சுட்டு பெரும்பாலும் அடிக்கடி பயின்று வருகிறது.

உது, உவர், உப்பிடி, உவள், உவன், உங்கதான், உங்கினைக்க என்பது போன்ற சொற்கள் முஸ்லிம்கள் வழக்கில் பயன்படுத்தப்படுவதேயில்லை. 

புகையிலை என்பதனை யாழ்ப்பாணத்தார் பொயிலை என ஒலிக்க முஸ்லிம்களோ போயிலை என ஒலிக்கிறார்கள்.

பெண்னைக் குறிக்கும் அன்னை என்ற சொல் யாழ்ப்பாணத்தார் வழக்கில் அனை அல்லது எனை என்றே ஒலிக்கப்படுகிறது.

சொல்லணை, பாரணை, கேளணை என்றும், அன்னை என்ற பதம் விளிக்கப்படும்போது எணோய் எனவும் வரும். இவ்வாறு வழங்குவதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் வழக்கில் இல்லை. இதேபோல ஆணையிடும் போது யாழ்ப்பாணத் தமிழர் பயன்படுத்தும் முறையும் முஸ்லிம்களிடமில்லை. ஆணையிடும் வழக்கமும் இல்லை.

தொடரும்..

நூலாசிரியருடனான தொடர்புகளுக்கு,
எம்.எஸ். அப்துல் ரஹீம்
XB/6/1/2-அரச தொடர்மாடி,
எட்மன்டன் வீதி,
கிருலப்பனை,
கொழும்பு 6,
தொலைபேசி 0112514001



No comments

Powered by Blogger.