அரச தரப்பு மேதினத்தில் முஸ்லிம் காங்கிரஸும் பங்கேற்கும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகரசபைத் திடலில் நடைபெறவுள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மேதின ஊர்வலம் பொரளை கெம்பல் மைதானத்தில் பிற்பகல் ஒருமணிக்கு ஆரம்பமாகி, ஹோட்டன் பிளேஸ் ஊடாக கொழும்பு மாநகர சபைத் திடலை வந்தடையும்.
அனைத்து அரச தரப்பு கட்சிகளினதும் மேதின ஊர்வலங்கள் கொழும்பு மாநகர சபைத்திடலை வந்தடைந்தவுடன், மாலை 4 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேதினக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சம்பள உயர்வை வலியுறுத்தி ஐ.தே.க. மேதின ஊர்வலம்
இதேவேளை ஐ.தே.க. ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை காலை 10 மணிக்கு பண்டாரவளை நகரில் நடைபெற உள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தனியார் மற்றும் அரச துறையினரின் சம்பள உயர்வு, பல்கலைக்கழக பேராசிரியர்களின் சம்பள உயர்வு மற்றும் உத்தேச ஓய்வூதியத் திட்ட சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தல் ஆகிய முக்கிய விடயங்களை முன்வைத்து இந்த முறை மேதினக் கூட்டம் நடத்தப்படவுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment