இலங்கையர் ஒற்றுமையாக வாழ்வதை சர்வதேசம் விரும்பவில்லை - விமல்
இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை ஐநா சபை விரும்பவில்லை என முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
மேற்குலக அதி பலம்வாய்ந்த நாடுகளால் செய்ய முடியாத தீய செயல்களை செய்ய முடியும் என்பதை ஐநா சபை நிரூபித்துள்ளது. மாற்று ஐநா சபை தேவை என்ற சர்வதேசத்தின் நிலைப்பாட்டை மாற்றியமைப்பதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தண்டனை வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என அப்பாவியாக தெரிவித்துவிட்டு பான் கீ மூன், நவநீதம்பிள்ளையை முன்னிருத்தியுள்ளார்.
நிபுணர் குழு அறிக்கைக்கு அப்பால் சென்று குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவுள்ளதாக நவநீதம்பிள்ளை கூறுகிறார். நாடு என்ற அடிப்படையில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அபிவிருத்தி அடைந்து வரும், சமாதனத்தை வென்ற, ஒன்றுமையை கடைபிடிக்கும் நாட்டின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் வடக்கு கிழக்கு தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுவர்.
தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதை சர்வதேச சக்திகள் விரும்பவில்லை. இலங்கை அரசின் பங்காளர்களாக தமிழ் மக்கள் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. அதனால் இந்தியாவுடன் உள்ள உறவுகளை மேலும் வலுப்படுத்தி நடுநிலையான நாடுகளுடன் உறவுகளைப் பேணி இலங்கைக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டுக்களின் பொய் தன்மையை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்த வேண்டியது அவசியம். என்றார்.

Post a Comment