கிரிக்கெட்டில் 20 வருடமாக சூது, முன்னாள் இலங்கை கெப்டன் பரபரப்பு தகவல்
இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த பல ஆண்டு காலமாக சூதாட்டம் இருந்து வருகிறது என்றும் இது புற்றுநோய் போல பரவி வருவதாகவும் இலங்கை முன்னாள் கேப்டன் ஹசன் திலகரத்னே கூறியிருக்கிறார். இலங்கை அணியில் ஆடியபோது வாய்திறக்காத திலகரத்னே இப்போது வாய்திறந்திருக்கிறார். மேட்ச் பிக்ஸிங்கை இப்போது நிறுத்தாவிட்டால், பாகிஸ்தான் கதி தான் இலங்கைக்கு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
கிரிக்கெட்டில் மேட்ச் பிக்சிங் மோசடி இன்று, நேற்று துவங்கவில்லை. நீண்டகாலமாக உள்ள பிரச்சனை இது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த பிக்ஸிங் நடக்கிறது என்பதை உறுதியாகவே சொல்வேன்.உலகக் கோப்பை இறுதிப் பேட்டியில் ஏன் 4 வீரர்கள் திடீரென மாற்றப்பட்டனர். ( மென்டிஸ் நீக்கம் ரன்னே எடுக்காத கபுகேந்திரா சேர்ப்பு) இது ஏன் என்று இதுவரை புரியவில்லை. ஆனால் உலக கோப்பை போட்டி பிக்ஸ் செய்யப்பட்டது என்று நான் சொல்ல முடியாது. இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களின் பெயர் விவரங்களை விரைவில் வெளியிடுவேன்.
மேட்ச் பிக்சிங் இந்த நாட்டின் கிரிக்கெட்டில் சகஜமாகிவிட்டது . இது கேன்சர் மாதிரி பரவிக் கொண்டிருக்கிறது. வெளியில் சொல்ல நினைத்த பலர் முயன்றனர் ஆனால், அவர்களுக்கும் பணம் தந்து வாயை அடைத்து விட்டனர். பொறுப்பில் உள்ளவர்கள் விரைவில் இதனை தடுக்க வேண்டும். இல்லையேல் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட நிலைமைதான் இலங்கை அணிக்கு ஏற்படும் என்றார்.
இலங்கை அணியில் 83 டெஸ்ட் போட்டிகள், 200 ஒரு நாள் போட்டியில் விளையாடியவர். 2003 முதல் 2004 வரை ஒரு ஆண்டு கேப்டனாக இருந்தவர் இவர் இப்போதுதான் சூதாட்டம் குறித்து வாய்திறந்திருக்கிறார்.

Post a Comment