தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை மே 10 ஆரம்பம், கட்டணம் 10.000 ரூ
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை அடுத்தமாதம் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. துறைமுக, விமானசேவைகள் அமைச்சு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்தக் கப்பல் சேவை தொழில்நுட்பச் சிக்கல்களினாலும், பின்னர். இந்தியா பயன்படுத்தவிருந்த கப்பல்கள் லிபியாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அனுப்பப்பட்டதாலும் தாமதம் ஏற்பட்டது.
எதிர்வரும் மே 10ம் நாள் முதலாவது கப்பல் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 2ம் நாள் இது தொடர்பான விளம்பரப்படுத்தப்பட்ட பின்னர் இந்தச் சேவையை அதிகளவானோர் நாடுவர் என்ற எதிர்பார்ப்பதாக துறைமுக, விமானசேவைகள் அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வாரத்தில் மூன்று நாட்கள் நடத்தப்படவுள்ள இந்தச் சேவைக்கு இந்தியா மூன்று கப்பல்களையும், சிறிலங்கா இரண்டு கப்பல்களையும் பயன்படுத்தவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கப்பலிலும் நீச்சல் தடாகம், நூலகம், உணவகங்கள், சூதாட்ட விடுதிகள் என்பனவும் அமைந்திருக்கும் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
16 கடல் மைல் வேகத்தில் 1044 பயணிகளையும், 300 வாகனங்களையும் இந்தக் கப்பல் ஒரே தடவையில் ஏற்றிச் செல்லும் வசதிகளைக் கொண்டுள்ளது. இந்தச் சேவைக்கு இருவழிப் பயணக் கட்டணமாக 10 ஆயிரம் ரூபாவை அறிவிடத் திட்டமிட்டுள்ள அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்தில் குடிவரவு-குடியகல்வு, சுங்க, காவல்துறை நிலையங்களை வேகமாக அமைத்து வருகிறது.

Post a Comment