மீண்டும் டெங்கு
நாட்டின் பல பிரதேசங்களில் டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அமைச்சின் நோய் பரவுதல் தடுப்பு பிரிவு நேற்று தெரிவித்தது.
இதன் காரணத்தினால் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 13 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 1245 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் நோய் பரவுதல் தடுப்பு பிரிவின் பிரதம மருத்துவ நிபுணர் சுகத் பீரிஸ் நேற்று தெரிவித்தார். டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைவதற்கு பொது மக்களே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், டெங்கு நோய்க்கு ஜனவரி மாதத்தில் 893 பேரும், பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையும் 352 பேரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நோய்க்கு கடந்த ஒன்றரை மாத காலப்பகுதியில் கொழும்பு, கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக கொழும்பு மாநகர சபைப் பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் இந்நோய் தற்போது பெரிதும் தீவிரமடைந்துள்ளன. டெங்கு நோய் மீண்டும் தீவிரமடைவதற்கு பொதுமக்கள்தான் காரணம்.
கடந்த வருடம் ஜுலை, ஒகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு விரிவான அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால் டெங்கு நோயால் பாதிக்கப்படுவோரினதும் உயிரிழப்போரினதும் எண்ணிக்கை பெரிதும் வீழ்ச்சி அடைந்தது.
என்றாலும் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை தொடர்ந்தும் ஒழுங்கு முறையாக கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் அசிரத்தையோடு நடக்கத் தொடங்கியதால் மீண்டும் டெங்கு நோய் தீவிரமடைய ஆரம்பித்திருக்கின்றது.
ஆகவே டெங்கு நுளம்புகள் பெருக முடியாதபடி சுற்றாடலை சுத்தமாகவும் உலர் நிலையிலும் தொடர்ந்தும் வைத்திருப்பது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றார்.

Post a Comment