ஆட்சியை தக்கவைக்க கடாபி தீவிரம்
ஆப்ரிக்க நாடான லிபியாவின் தலைவர் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அதேநேரம், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில், கடாபி தனது ஆதரவாளர்களின் கூட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறார்.
ஆப்ரிக்காவின் வடபகுதியில் உள்ள எகிப்தின் அண்டை நாடான லிபியாவில், 1969ல் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த கடாபி அன்று முதல் அந்நாட்டின் அறிவிக்கப்படாத தலைவராக இருந்து வருகிறார்.
துனிசியா, எகிப்தைத் தொடர்ந்து லிபியாவிலும் கடாபிக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன.அதனால், ஆட்சியை தக்க வைக்கும் விதத்தில், கடாபி தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு, தன் புகழ் பாடும் பேரணிகளை நடத்தி வருகிறார். தலைநகர் டிரிபோலியில் நேற்று நடந்த ஆதரவுப் பேரணியில் திறந்த காரில் அவர் வலம் வந்தார். அவரது காருக்குப் பின், தொண்டர்கள் அணி வகுத்து வந்தனர்.
எதிர்ப்பு போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் விதத்தில், அரசு ஊழியர்களின் சம்பளம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு, தன்னை எதிர்த்ததால் சிறை வைக்கப்பட்ட 110 அரசியல் கைதிகளை விடுவித்தது போன்ற சில தந்திர உத்திகளையும் கையாண்டு வருகிறார் கடாபி.இந்நிலையில், நேற்று முன்தினம் போராட்டத்தில் பலியானோரின் இறுதிச் சடங்குகள் நேற்று பிங்காசி மற்றும் பெய்டாவில் நடந்தன. பிங்காசியில் பலத்த ராணுவப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தெருக்களில் ராணுவ வீரர்கள் ரோந்து வந்தனர்.
கடந்த இரு நாட்களில் மட்டும் போராட்டங்களில் மொத்தம் 24 பேர் பலியானதாக அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.லிபியாவில் போராட்டம் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இணையதள சேவைகளை அந்நாட்டு அரசு துண்டித்துவிட்டது.

Post a Comment