சாரதிகளின் அவசர கவனத்திற்கு..!
வாகன போக்குவரத்து விதிகளை கடுமையாக நடை முறைப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை வழங்கியுள்ளார்.
இறக்குமதி வரியை செலுத்தாமல் பல்வேறு முறைகளில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழுமையான வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி
பணித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக கராஜ் இலக்கங்களுடன் (சீ. சீ. இலக்கம்) வாகனங்கள் வீதியில் செல்வது உடனடியாக தடைசெய்யப்படுகின்றது. பல்வேறு மோசடி வழிகளில் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழு வாகனங்களாக்கி விற்பனை செய்துள்ள வாகனங்களை உடனடியாக கண்டறிந்து மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சு, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், நிதி அமைச்சு, சுங்க திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இத்திட்டத்தை நடை முறைப்படுத்தவுள்ளன.
போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி பணிப்பிற்கமைய வாகனங்களில் ‘ஆசனப்பட்டி’ கட்டாயமாகப் பயன்படுத்தல் வேண்டும். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் செலுத்துவது தடை என்ற சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி தீர்வை மூலம் நாட்டுக்குள் வரவேண்டிய பெருந்தொகையான பணம் உதிரிப்பாகங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதன் ஊடாக அரசுக்கு கிடைக்காமல் போயுள்ளது. இதனை தடுக்கும் நோக்குடனேயே ஜனாதிபதி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Post a Comment