பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பசுப்பால் வழங்க ஏற்பாடு
ஆரம்ப சிறுபராய அபிவிருத்தி நிலையம் மற்றும் பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு பசும்பால் வழங்கும் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.இத்திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமுல்படுத்தப்படும்.
மாதமொன்றுக்கு ஒரு சிறுவனுக்கு 150 ரூபா பெறுமதியான முத்திரை வழங்கப்படும்.இதற்கேற்ப நாளொன்றுக்கு 150 மில்லி லீற்றர் பால் வழங்கப்படும்.ஒரு மாதத்தில் 20 தினங்களுக்கு பால் விநியோகம் இடம்பெறும்.
தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை, மில்கோ நிறுவனம் ஆகியன இவ்விலைக்கு பால் விநியோகம் செய்ய உடன்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர்கள் தமது பிரிவிலுள்ள ஆரம்ப சிறுபராய அபிவிருத்தி நிலையம் மற்றும் பாலர் பாடசாலை சிறுவர்கள் தொடர்பான தகவல்களைத்திரட்டி அனுப்புவதன் மூலம் அவர்களுக்கான முத்திரைகளை பெற்றுக் கொள்ளமுடியும்.
அவ்வப்பகுதி பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் சுகாதார நிலைமைகளையும்,அரசாங்க மிருக வைத்திய அதிகாரி பாலின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.
சுகாதார அமைச்சு,பொருளாதார அபிவிருத்திஅமைச்சு,நிதிதிட்டமிடல் அமைச்சு,கால் நடை கிராமிய சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சமுர்த்தி ஆணையாளர் நாயகம் திணைக்களம் ஆகியன இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளன.

Post a Comment