தலிபான் போராளிகளின் வீரமிகு தாக்குதல்! இவ்வாண்டு 700 நேட்டோ படையினர் பலி!!
தலிபான் போராளிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரில் இவ்வாண்டில் மாத்திரம் 700 நேட்டோப் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளை அழிப்பதற்கான போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்தினை அண்மித்துள்ள நிலையில் இவ்வாண்டில் மாத்திரம் 700 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் தலிபான்களுக்கு எதிரான யுத்தத்தினைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அங்கு மேலும் 10,000 வெளிநாட்டுப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமையன்று தென் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வன்முறையில் இருபடைவீரர்கள் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்தே இங்கு இறந்த நேட்டோ படைவீரர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்வடைந்துள்ளதாக செய்திச் சேவையொன்று தெரிவித்துள்ளது.
மேலும்,தலிபான்களின் பாரம்பரிய பலமிக்க பகுதிகளில் தம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ள போர் நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு தமது நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய தேவையுள்ளதாகவும் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றன. பாகிஸ்தானிய எல்லைப்பகுதியிலுள்ள பல பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அங்கு வன்முறைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் அங்கு நேட்டோப் படைகள் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை,குனார் மாகாணத்தின் சௌகி பகுதியிலுள்ள மலைப்பகுதியில் உள்ள சிறிய வீதியொன்றினூடாக ரோந்து சென்ற படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. அத்துடன், பிறிதொரு ரோந்து அணியினர் வாகனம் ஒன்றில் சென்றபோது வீதியோரக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகளுக்கு எதிராக வீதியோரக் குண்டுத்தாக்குதல், துப்பாக்கிப் பிரயோகம் என்பன அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment