Header Ads



யாழ் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களே ! நாம் பட்ட துன்பம் போதும் !!

யாழ் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஏட்டிக்குப் போட்டி மீண்டுமொரு தடவை வெளிசத்திற்கு வந்துள்ளது.

மௌலவி சுபியான் அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பியிருந்த ஒரு செவ்வியில் தனது வேண்டுகோளினடிப்படையில் யாழ் முஸ்லிம் வட்டாரத்தை அபிவிருத்திசெய்ய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ பெருந்தொகை பணத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

எனினும் சட்டத்தரணி ரமீஸ் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் மௌலவி சுபியான் உண்மைக்குப் புறம்பாக கருத்துக்களை அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அமைச்சர் றிஸாத் பதியுதீனின் எழுத்துமூல கடிதத்தின் அடிப்படையிலேயே யாழ் முஸ்லிம் வட்டாரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார்.

உண்மையில் இரு யாழ் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இவ்வாறு அறிக்கை போர் நடத்துவதை யாழ் முஸ்லிம் வலைத்தளமானது கவலையுடன் நோக்குகிறது. நொந்துபோன எமது யாழ் சமூகம் தன்னை மீண்டும் நிலைநிறுத்த போராடிவரும் இந்நிலையில் இதுபோன்ற அனாவசிய அறிக்கைகள் தேவையற்றது.

யார் குத்தியானாலும் அரிசி வந்தால் சரி என்பதுதான யாழ் முஸ்லிம் சமூகத்தின் தற்போதைய நிலைப்பாடாகும். யாழ் முஸ்லிம் வட்டாரம் அபிவிருத்தியடைய வேண்டும் இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. எனினும் இதற்காக சண்டைபிடித்துக்கொள்ளவேண்டிய எத்தகையை அவசியமும் இல்லை.

எனவே நிலைமையை அறிந்து எமது யாழ் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் செயற்பட வேண்டுமென்பது எமது கோரிக்கையாகும். யாழ் முஸ்லிம் வட்டாரத்தை அபிவிருத்தி செய்யவேண்டிய பாரிய பணி  அரசாங்கத்தை சார்ந்துள்ளது.

இதில் தனி நபர் எவரும் அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை.

மௌலவி சுபியானும், சட்டத்தரணி ரமீஸும் இவ்வாறு அறிக்கை வெளியிடாவிட்டாலும் யாழ் முஸ்லிம் வட்டாரத்தை அபிவிருத்தி செய்வதிலிருந்தும் அரசாங்கம் விலகிநிற்க முடியாது. இந்நிலையில் குறித்த இரு யாழ் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும் யதார்த்தத்தை தெளிவாக புரிந்துகொண்டு, சமூகத்திற்கு மேலும் பங்காற்றுமாறு நாம் அவர்களிருவரிடமும் கோருகிறோம்.

எமது யாழ் முஸ்லிம் சமூகம் துன்பப்பட்டது போதும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிந்துகொள்வது அவசியமல்லவா..??

No comments

Powered by Blogger.