மஹிந்தவின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி - சஜித்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே தேங்காய் இறக்குமதி செய்யும் அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஐ.தே.க.பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரையினால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாத்தளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;
முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் நகர்புறங்களில் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும் ஆடைத் தொழிற்சாலைகள் உட்படப் பல்வேறு கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்பட்டு தகுதிக்கேற்ப வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு தொழில் வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.
1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.ஆட்சிப் பொறுப்பை ஏற்றது முதல் ஒவ்வொரு வருடமும் பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றியுள்ளனர். இதேபோன்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை வெளியிடப்பட்ட வரவுசெலவுத் திட்ட அறிக்கைகளில் இவ்வருடம் சமர்ப்பிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் போலியான வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் மக்களை ஏமாற்றும் வார்த்தைகளாகவே உள்ளது.
எனவே ஏமாற்றுவித்தைகளை மட்டுமே கையாண்டு வரும் இந்த போலியான அரசை மக்கள் தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க எண்ணக்கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment