மோசடிச் சம்பவங்கள் யாழில் அதிகரிப்பு
யாழ்ப்பாணத்திலுள்ள பல சந்தைகளில் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் நிறுவைகளிலும் மோசடிகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ நிறையுள்ள மீன் முந்நூறு ரூபாவாக விற்பனை செய்யப்படும் போது கால் கிலோ நிறையுள்ள மீன் எண்பது ரூபாவாக விற்கப்படுகிறது. நாநூற்று ஐம்பது ரூபாவாக விற்கப்படும் ஒரு கிலோ மீன் அரைக்கிலோ வாங்கும் போது இருநூற்று முப்பது ரூபாவாகவும் கால் கிலோ வாங்கும் போது நூற்றியிருபது ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிச் சந்தையில் ஒரு கிலோவின் விலை இருநூற்று ஐம்பது ரூபாவாக இருக்கும் போது அரைக்கிலோவின் விலை நூற்று முப்பது ரூபாவாகவும் நூறு கிராமின் விலை முப்பது ரூபாவாகவும் இருக்கிறது.
கல்வியங்காடு, திருநெல்வேலி, மருதனார்மடம், சுன்னாகம், குளப்பிட்டி, யாழ்ப்பாணம் போன்ற மரக்கறி மற்றும் மீன் சந்தைகளில் இந்தத் திருகுதாள வேலைகள் சில வியாபாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்றன.
சில சந்தைகளில் தராசுகளை கட்டித் தொங்கவிட்டு நிறுக்காமல் கையில் பிடித்துப் பொருட்களை நிறுத்துக் கொடுக்கும் வழமையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்துடன் முத்திரை குத்தப்படாத தராசுப் படிகளும் பல வியாபாரிகளிடம் காணப்படுகின்றன. பொதுமக்களின் நன்மை கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்படியான வியாபாரிகள் மீது கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Post a Comment