இலங்கையின் இவ்வாண்டின் சிறந்த மனிதர் யார்..??
கையாலாகாத ஆர்ப்பாட்டக்காரர் விமல் வீரவன்சவா, கற்பனைக் கதாசிரியர் மேவின் சில்வாவா, இலட்சிய உறுதிகொண்ட ரணில் விக்கிரமசிங்கவா, சிறையிடப்பட்டிருக்கும் முன்னாள் போர் வீரர் பொன்சேகாவா அல்லது தப்பி ஓடிவிட்ட அவரது மருமகன் தனுன திலகரத்தினவா?
இவ்வாறு கேள்வியினை எழுப்பி பதில் தேடியுள்ளது இந்திய ஊடகமான Hindustan Times. அதன் செய்தியாளர் Sutirtho Patranobis எழுதியுள்ள செய்திக் குறிப்பு இது.
கடந்த சனவரியில் அடையாளங்கள் எதுவுமின்றிக் காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட இந்த வரிசையில் குறிப்பிடுவதற்குப் பொருத்தமானவரா?
நாட்டினது அதிக புகழ்பெற்ற அரசியல் கைதியாகிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இந்த ஆண்டினது சிறந்த மனிதராகத் தெரிவுசெய்யப்படப் பொருத்தமானவர் என நான் கருதுகிறேன்.
இந்த ஆண்டினது முதற்பகுதியில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு நாட்டை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளரான திசநாயகம்தான் இந்த ஆண்டினது சிறந்த மனிதருக்கான போட்டியில் பொன்சேகாவிற்கு அடுத்தபடியாக உள்ளார்.
பொன்சேகா சிறையிலடப்பட்டது 2010ம் ஆண்டின் ஓர் அரசியல் கதை. இந்த நாட்டில் இதுவரை அறியப்படாததொரு விடயம் தொடர்பாக பொன்சேகாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது, உறவினர்களின் துணையுடன் ஊழலில் ஈடுபட்டார் என்பதே அது.
வரலாற்றில் இதுபோன்ற சம்வங்களை என்னால் இனங்காண முடியாதுள்ளது. பொன்சேகாவினது விடயத்தில் தனது மருமகன் தனுன மீதுகொண்ட கண்மூடித்தனமான பிரியத்தினால் ஏற்பட்டதொன்றே.
இதுபோல தனது மருமகன் மீது பொன்சேகா அளவு கடந்த அன்பினைக் காட்டியதை சகித்துக்கொள்ளாத இராணுவ நீதிமன்றம் பொன்சேகாவிற்கு 30 மாதகாலச் சிறைத்தண்டனை வழங்கியிருக்கிறது.
பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் மகிந்த ஒரு நொடியில் எதிரியாகி இராணுவ நீதிமன்றின் தீர்ப்பினை ஆமோதித்தார். கடந்த பெப்பிரவரியில் கைதுசெய்யப்பட்டு கடற்படைத் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பொன்சேகா கடந்த ஒக்ரோபரில் சிறைக்கு மாற்றப்பட்டார்.
தடுப்பிலிருந்தபோது பொன்சேகா நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது தனது பரிதாப நிலை மற்றும் வழங்கப்பட்டிருக்கும் மோசமான தண்டனை தொடர்பாகப் பேசுவார்.
ஆனால் பொன்சேகா சிறையிடப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் செயற்பாடும் இடைநின்றுவிட, நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏனைய விசாரணைகளில் பங்கெடுப்பதற்காக இடைக்கிடையே வெளியே வந்துசெல்கிறார். மாதமொருமுறை சிறைச்சாலைக்குச் செல்லும் மனைவி அனோமா தனது கணவனைச் சந்தித்து வருகிறார்.
போரின் இறுதி நாட்களில் தமிழ் மக்களுக்கு எதிரான மோசமான செயற்பாடுகளில் பொன்சேகாவும் ஈடுபட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் கடந்த சனவரியில் இடம்பெற்ற குடியரசு அதிபர் தேர்தலில் தமிழர்கள் பொன்சேகாவிற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தனர்.
மாற்றுக் கருத்துடையவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பொன்சேகாதான் பொறுப்பு என கொழும்பிலுள்ள பலரும் குற்றம் சுமத்துகிறார்கள்.
இவை அனைத்தும் இருக்கின்ற போதும் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதருக்கான போட்டியில் ஏனையவர்களை விட பொன்சேகாவே உச்சத்தில் இருக்கிறார்.







Post a Comment