யாழில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுங்கள் திருமதி மகேஸ்வரன் எம்.பி. ஜனாதிபதிக்கு கடிதம்
குடாநாட்டில் கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக குடாநாட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன் கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலிகாமம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கம் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேபோல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குருக்கள் சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார். இதேபோல் சுன்னாகம், மானிப்பாய், ஆனைக்கோட்டை, வடமராட்சி உட்பட பல பகுதிகளிலும் கொள்ளைச் சம்பவங்களும் கொலைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
யுத்தம் முடிபடைந்து ஒன்றரை வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதானது அரசாங்கத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்தும். குடாநாட்டில் தொடரும் கொலை, கொள்ளைச் சம்பவங்களினால் அங்கு செல்வதற்குக் கூட மக்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இத்தகைய குற்றச்செயல்களை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்.குடாநாட்டில் படையினரும் பொலிஸாரும் பெருமளவில் கடமையில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் இத்தகைய சம்பவங்கள் தொடர்வதானது அரசாங்கத்துக்கே அபகீர்த்தியை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இவ்விடயத்தில் தலையிட்டு இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

Post a Comment