யாழ் நகைக்கடை வியாபாரிகள் பொலிஸாருக்கெதிராக குற்றச்சாட்டு
யாழ்.மாவட்ட நகைக்கடை வியாபாரிகளைத் திருட்டு நகைகள் கொள்வனவுக் குற்றச்சாட்டில் பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக யாழ்நகர நகைக்கடை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது;
திருட்டு நகைகள் கொள்வனவு செய்தனர் என்பது குறித்த விசாரணைக்காக திருடனுடன் சம்பவ வியாபார நிலையத்திற்கு வருகின்ற பொலிஸாரினால் திருடனைப் பார்த்திலும் நகைக்கடை வியாபாரிகளை மிக மோசமான நிலையில் அதாவது மனிதாபிமானமற்ற நிலையில் நடத்தப்படுகின்றனர்.
இவ்வாறான விடயங்கள் அதிகமானவை நடைபெற்றிருந்த போதிலும் இதுவரை எவராலும் குறிப்பாக வர்த்தக சங்கத்தினராலும் எதுவிதமான நடவடிக்கையும் எதிர்ப்புகளையும் வெளிப்படுத்தவில்லை.
இதனால் நகைகளைக் கொள்வனவு செய்யும் விடயத்தில் நாங்கள் பெரும்பாலும் பாதிப்பினையே எதிர்நோக்கி வருகின்றோம்.
வியாபார நிலையங்களிற்கு தினம்தோறும் எமக்குத் தெரிந்தவர்களோ அல்லது உறவினர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ வருவதில்லை. வாடிக்கையாளர்கள் உண்மையானவர்களா அல்லது திருடர்களா என்று நாம் விசாரிக்க முடியாது அல்லது தெரிந்து கொள்ளவும் முடியாது.
கொள்வனவு செய்யும் போது உள்ளூர் நடைமுறைகளுக்கு ஏற்ற முறையில் முகவரி, பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றைப் பதிவு செய்த பின்னரே நாங்கள் நகைகளைக் கொள்வனவு செய்கின்றோம்.
இருந்தபோதும் நாங்கள் கொள்வனவு செய்த நகை திருட்டு நகை என்று உறுதிப்படுத்துவதற்காக குறிப்பிட்ட வியாபார நிலையத்திற்கு அழைத்து வரப்படும் திருடன் காட்டுகின்ற அடையாளமும் சொல்கின்ற தொகை நகைகளினையும் உடனடியாக பொலிஸார் தரவேண்டும் என்றும் அவ்வாறு தரப்படாவிட்டால் கைது செய்வோம் என்றும் மிரட்டுகிறார்கள்.
இந்த விடயத்தில் திருடன் சொல்கின்ற நகையின் தொகைகளையே அவர்கள் நம்புகின்றனர். பற்றுச்சீட்டுகளில் எழுதிஇருக்கின்ற தொகை கணக்கில் எடுக்கப்படுவதில்லை. தன்னுடையதும் வியாபார நிலையத்தினதும் கௌரவத்திற்காக பொலிஸார் சொல்கின்ற தொகை நகையைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்படுகின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கொடுக்கப்படும் நகைகள் எமக்கு மீளக் கிடைப்பதில்லை. இதுமட்டுமல்லாமல் தொடர்ந்தும் அப்பொலிஸ் அதிகாரிகளால் நாங்கள் துன்பப்படுத்தப்பட்டு வருகின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக ஒரு நகை வியாபாரி கருத்துக் கூறுகையில்;
யாழில் தற்போது சட்டங்கள் ஒழுங்கான முறையில் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இவ்வாறான சம்பவங்கள் சுமார் 25 வருடகாலமாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. இந்த விடயத்தில் வர்த்தக சங்கமே தலையிட்டு விரைவானதும் தெளிவானதுமான முடிவினைப் பெற்றுத்தரவேண்டும் என்றார்.
மேலும் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்;
நானும் 15 வருடங்களுக்கு முன்னர் இதுபோன்று எனது பவுணை பொலிஸாரிடம் கொடுத்து பின்னர் நீதிமன்றத்தின் மூலமாக வழக்குத் தொடுத்தேன். இன்னமும் எனக்கு அந்த நகைகள் வந்துசேரவில்லை. ஆனால் எனது 25 பவுண் நகையும் இப்பொழுது பித்தளையாக மாறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
குடாநாட்டில் கொள்ளைச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் சட்டத்தினையும் ஒழுங்கினையும் பொது மக்களது பாதுகாப்பினையும் உறுதிப்படுத்துகின்ற பொலிஸார் இவ்வாறான மனிதாபிமானம் அற்றமுறையில் எங்களை நடத்துவது எமக்கு பெரும் மனவேதனையை அளித்துள்ளது என்றும் கவலை வெளியிட்டனர்
Post a Comment