யாழில் திருத்திய வாக்காளர் இடாப்பு திங்கள் முதல் பார்வையிடலாம்
யாழ்ப்பாண மாவட்ட திருத்தியமைக்கப்பட்ட வாக்காளர் இடாப்புகள் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகங்கள்,தபாலகங்கள்,தேர்தல் திணைக்களங்கள் ஆகிய இடங்களில் மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருக்குமென யாழ்.மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் பொன்னுத்துரை குருநாதன் தெரிவித்துள்ளார்.
புதிய திருத்தப்பட்ட வாக்காளர் இடாப்புக்களில் யாழ்.மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமேயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் ஏழு இலட்சத்து இருபத்தோராயிரம் பேர் வாக்காளராக இருந்துள்ளனர்.
புதிய திருத்தப்பட்ட வாக்காளர் இடாப்பில் ஐந்து இலட்சத்துக்கு சற்றுக் குறைவான வாக்காளர்கள் பெயர்களே பதியப்பட்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்காளர்களில் 18 வயதடைந்தவர்கள் 83,000 பேரின் பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் இடாப்பில் தமது பெயர் பதியப்படவில்லையெனத் தெரிவிப்பவர்கள் அதற்கான காரணங்களுடன் பெயர்களைப் பதிவதற்காக ஜனவரி 3 ஆம் திகதிக்கும் பெப்ரவரி 3 திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கமுடியும்.
இதேவேளை 20 ஆண்டுகள் மீள்குடியமராமல் இருப்பவர்களின் வாக்காளர் பதிவு முற்றுப்பெறவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
Post a Comment