மீண்டும் வெள்ளைவான், உரும்பிராய் இளைஞன் கடத்தல்
உரும்பிராய் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வெள்ளைவானில் வந்தோரால் இளைஞனொருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை 8.30 மணியளவில் மானிப்பாய்உரும்பிராய் வீதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது;
நேற்றுக் காலை இந்த இளைஞன் மானிப்பாய் வீதியூடாக சைக்கிளில் உரும்பிராய் சந்திநோக்கி சென்று கொண்டிருந்த போது இரு மோட்டார் சைக்கிளில் வந்தோர் வழிமறித்துள்ளனர். இவ்வேளையில், அந்த இளைஞனின் பின்னால் வந்த வெள்ளைவானிலிருந்து இறங்கியவர்களும் மோட்டார் சைக்கிளில் வந்தோரும் இந்த இளைஞனை சைக்கிளிலிருந்து இழுத்து வானில் தூக்கிப் போட்டுக்கொண்டு விரைந்து சென்றுவிட்டனர்.
பெரிதும் சன சந்தடியில்லாத இந்தப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்ற போது சற்று தூரத்தில் சென்றுகொண்டிருந்தவர்களும் அச்சத்தால் அப்பகுதியிலிருந்து ஓடி ஒளிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட இளைஞன் யார், அவரைக் கடத்தியவர்கள் எங்கு சென்றார்கள் என்பன தெரியவரவில்லை. எனினும் கடத்தப்பட்ட இளைஞனின் சைக்கிளும் அவரது காலணிகளும் (செருப்பு) சம்பவம் நடைபெற்ற இடத்தில் கிடந்தன.
இந்தச் சம்பவம் நடைபெற்ற பகுதியிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். எனினும் தங்களுக்கு இதுபற்றி எதுவும் தெரியவரவில்லையெனக் கூறியுள்ளனர். படையினருக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு வந்து விசாரணைகளை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Post a Comment