யாழில் இடம்பெறும் கொலை, கொள்ளை நடவடிக்கைக்கு அரசாங்கமே பொறுப்பு

இராணுவ மற்றும் பொலிஸ் மயமாக்கப்பட்டிருக்கின்ற யாழ்ப்பாணத்தில் துணிகரமாக இடம்பெற்று வருகின்ற தொடர் படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற தொடர் அசம்பாவிதங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அங்கு ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இராணுவ அல்லது பொலிஸ் மயமாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இனம் தெரியாத வகையில் கொள்ளைச் சம்பவங்களும் படுகொலைகளும் இடம்பெறுவதானது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஆச்சரியத்தைத் தருகின்றது.
இங்கு சட்டவிரோதமான குழுக்கள் செயற்படுவதாக இருப்பின் அவ்வாறு நடைபெறுகின்ற படுகொலைகள், கொள்ளைச் சம்பவங்கள், ஆயுதமுனை மிரட்டல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரிகளும் இராணுவ உயரதிகாரிகளும் மற்றும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.
ஏனெனில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற இந்த படுகொலைகளுக்கு காரணங்களே இல்லாதிருக்கின்றன. குவிக்கப்பட்டுள்ள பொலிஸாரும் இராணுவமும் அறியாது இந்த அசம்பாவிதங்களும் அருவருப்பான செயற்பாடுகளும் நடந்தேறுவதற்கு இடமில்லை. எனவே இத்தகைய சம்பவங்களுக்கு பாதுகாப்பு தரப்பும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும்.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் ஜனவரி நான்காம் திகதிய பாராளுமன்ற அமர்வின்போது வடக்கில் இடம்பெற்று வருகின்ற படுகொலைகள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து கவனத்திற்கு கொண்டுவர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
எது எப்படி இருப்பினும் இந்த காட்டுமிராண்டித் தனமான செயற்பாடுகளை ஏற்க முடியாது அரசாங்கத்தினாலேயே இதனை தடுத்து நிறுத்த முடியாதிருப்பதுதான் வேடிக்கையானது என்றார்.
Post a Comment