Header Ads



வாந்திபேதியை பரப்பினார்களாம் ஹெய்ட்டியில் 45 பேர் அடித்துக்கொலை


ஹெய்ட்டியில் 2,500 பேரைப் பலிகொண்ட வாந்திபேதி நோயைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டின்பேரில் 45 பேர் கலகக்காரர்களால் விசாரணையின்றிக் கொல்லப்பட்டுள்ளனர்.

தென்பிராந்தியமான கிறான்ட் ஆன்ஸில் சந்தேகத்திற்குரிய 14 பேர் மாயாஜாலத்துடன் கூடிய பதார்த்தங்களினால் மீண்டும் வாந்திபேதி நோயினைப் பரப்புவதாக உள்ளூர் மக்கள் அச்சங்கொண்ட நிலையில் அவர்களை அடித்துக்கொலை செய்துள்ளனர்.

கிறான்ட் ஆன்ஸில் நோய்களை பில்லி சூனியத்தால் இயற்கையாகக் குணப்படுத்துவோரே அப்பகுதியில் வாந்திபேதியைப் பரப்புவதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், கலகக்காரர்கள் அவர்களைத் தாக்கி வருகின்றனர். இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாகத் தொடர்பாடல் அமைச்சின் அதிகாரி மொய்ஸ் பிரிஸ் இவன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஏனைய ஐவர் நாட்டின் வேறு பாகங்களில் குறித்த அச்சம் காரணமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.
 கொல்லப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பில்லி,சூனியக்காரர்கள் எனவும் அவர்கள் வீதிகளில் வைத்து எரிக்கப்பட்டும் கல்லால் அடித்தும் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு நூற்றாண்டில் இவ்வாண்டிலேயே அதிகளவானோர் நீர் தொடர்பான பக்றீரியாவின் தாக்கத்திற்குள்ளாகியிருந்தனர். ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் பேர் இப்பக்றீரியா தாக்கத்திற்குள்ளாகியுள்ளதுடன், 63 ஆயிரம் பேர் வைத்தியசாலைகளில் இதற்காகச் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், வாந்திபேதி நோயானது ஐ.நா. அமைதிப்படையினராலேயே ஹெய்ட்டிக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்நாட்டின் மதம் உள்ளிட்ட கலாசார அம்சங்களில் ஆவி, மாயாஜாலம் முதலிய சூனியங்களில் மக்கள் நம்பிக்கையாகவுள்ளனர்

No comments

Powered by Blogger.