யாழில் 3 இலட்சம் வாக்காளர் நீக்கம் எம்.பி.க்கள் 6 ஆக குறையலாம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3 இலட்சம் வாக்காளர்களின் பெயர்களை அரசாங்கம் 2010ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கவில்லை என்பதனாலேயே இவர்களின் பெயர்களை சிறிலங்காவின் தேர்தல் திணைக்களம் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் 816,000 வாக்களாரகள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். ஆயினும் அந்த வாக்காளர் பட்டியல் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இந்தநிலையில் தேர்தல் திணைக்களம் அவசர அவசரமாக யாழ்ப்பாண மாவட்டதில் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைத் திருத்தியமைத்துள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறியவர்கள், தற்காலிகமாக தங்கியுள்ளவர்கள் மற்றும் வெளிமாட்டங்களில் வசிப்பவர்களின் பெயர்களே இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 3 இலட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது 2010ம் ஆண்டின் பட்டியலில் சுமார் 5 இலட்சம் வாக்காளர்களே இடம்பெற்றுள்ளனர்.
ஆயினும் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் வாக்காளர்களின் விபரங்கள் இன்னமும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
“ பல வாக்காளர்கள் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக வெளிநாடுகளில் குடியேறி விட்டனர். அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
புதிய வாக்காளர் பட்டியல் ஜனவரி மாதம் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
அதன்போது பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் உறவினர்கள் விரும்பினால் அவர்களின் பெயர்களை இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படும்.“
என்று யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒவ்வொரு மாவட்டத்துக்குமான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
தற்போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்பதாகும்.
ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்படுவதால் ஆசனங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
“ யாழ்.மாவட்டத்தின் 2010ம் ஆண்டுக்கான வாக்காளர் இறுதிப் பட்டியல் ஏப்ரல் மாதமே வெளியிடப்படும்.
இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரே தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையைத் தீர்மானிப்பார்“ என்றும் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் ஆறாக்க் குறையும் என்று கருதப்படுகிறது.
1989ம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 11 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அது 9 ஆசனங்களாகக் குறைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment