போக்குவரத்து விதிகளை மீறியோரிடம் 11,900 கோடி ரூபா அபராதம்
இவ்வருடத்தில் வீதிப்போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறிய வாகனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக 119 பில்லியன் (11,900) கோடி ரூபா அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், மகிந்த பாலசூரிய இக்காலப்பகுதியில் நாட்டில் 30,671 விபத்துகள் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்
பொலிஸ் மா அதிபரின் வருட இறுதி செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸ் தலைமையகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
இவ்வருடத்தில் வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சில கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்தே காணப்படுகின்றது.சாரதிகள் வீதிப்பாதுகாப்பு விதிகளை மீறி வாகனங்களைச் செலுத்தியமை, பெரும்பாலானோர் மதுபோதையில் வாகனம் செலுத்தியமையாலும் விபத்துக்கான பிரதான காரணிகளாகும்.
இக்காலப்பகுதியில் மோசமான மரணங்களை ஏற்படுத்திய விபத்துகள் 2062 இடம்பெற்றுள்ளன. அடுத்து கூடுதல் சேதங்களை ஏற்படுத்திய விபத்துகள் 4952 இடம்பெற்றுள்ளன. சாதாரண விபத்துகள் 10,334 ஆகும். இவை தவிர சிறிய விபத்துகள் 15 ஆயிரம் அளவில் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக இவ்வருடத்தில் 30,671 விபத்துகள் பதிவாகியுள்ளன.
வீதிப்போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த பொலிஸார் 11 மாத காலத்துக்குள் 11900 கோடி ரூபாவை அபராதமாக வசூலித்துள்ளனர்.ஜனவரி மாதம் முதல் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய மேலும் பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக்கின்றன.

Post a Comment