Header Ads



யாழ் முஸ்லிம்களின் அவசர கவனத்திற்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நியமித்துள்ள கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ் முஸ்லிம்களாகிய நாமும், நாம் எந்த நாட்டில் வசித்தாலும் பரவாயில்லை உடனடியாகவே எமது சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினைகளையும், அவற்றுக்கு எத்தகைய தீர்வுகள் அவசியமென்பதையும் வலியுறுத்தி ஆணைக்குழுவுக்கு உங்கள் சாட்சியங்களை எழுதி அனுப்புங்கள்.

குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னர் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்புக்களோ தாமாக முன்வந்து சாட்சியமளிக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எழுத்துமூலமாக முன்வைக்கப்படும் சாட்சியங்கள் நன்கு ஆராயப்படுமென்றும் அதன் பின்னரே இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிப்பதற்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆணைக்குழுவின் அமர்வு தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. அங்கு நேரில் செல்ல முடியாதவர்கள் கடித மூலம் தமது சாட்சியங்களை சமர்ப்பிக்கமுடியும். எனவே காலம் தாமதிக்காது உடனே செயலில் குதித்து நமது யாழ் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வரலாற்றுப் பதிவாக்க முயலுவோம். இந்த தகவலை ஏனைய யாழ் முஸ்லிம்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

No comments

Powered by Blogger.