Header Ads



தாய் வழிகாட்ட, குட்டிகள் பின்தொடர...!

(வடமாகாண உறவுகள் மீதான கவனயீர்ப்பைக் கோருவதற்காக முஹம்மது அப்துல்லா எழுதிய சிறுகதையொன்றை இங்கு காலத்தின் அவசியம் கருதி மீள்பதிவிடுகிறோம்)

அரைக்குந்துகட்டி தகதகக்கும் தகரத் தால் வேயப்பட்ட சிறுவீடு. வாப்பா, உம்மா, மகன் ஆகியோரின் உடைகள் அனைத்தும் குறுக்குச் சட்டத்தில் மூவறக் கலந்துகிடக்கின்றன. மூலையில் கடைக்காரர் விட்டெரிந்த பெரிய அங்கர் பெட்டி. அதற்குள் சன்லைட் கமகமக்க சலவை செய்த சில உடுப்புகள். பெட்டிக்கருகில் காமா சோமாவென குலைந்துகிடக்கும் பழைய துணிகளின் மீது அந்தப் பூனை. முதன் முதலில் பார்ப்பவர்கள் புலிக்குட்டியோ என ஆச்சரியப்படும் சைஸ். நிம்மதியாகத் தூங்குகிறது.

'இந்தச் சனியன எத்துன தரம் தொரத்துனாலும் காலச்சுத்திக்கிட்டு ஊட்டுக் குள்ளதான் கெடக்கு... இன்டைக்கு இதுக்குச் செய்றன் வேல...' சல்மா பூக்கம்பாளையை கையிலெடுத்தாள்.

'சல்மா... சல்மா... அடிக்காதிங்க.... அடிக்காதிங்க. பூனைப்பாவம் பொல்லாதது' கணவர் அஸீஸ் கிணற்றடியில் இருந்து ஓடி வந்தார். தப்பியது பூனை. 'பாவம் சல்மாஇ நாமளே ஒரு அகதி. அதையும் துரத்தி அகதியாக்கணுமா? கையிலிருந்த பூக்கம்பாளையை பிடுங்கியெறிந்தார். 'உன்னை அப்புறம் பாத்துக்கிறேன்' என கண்ணால் கறுவிக்கொண்டு ஆத்திரந் தீர அடுக் களைக்குள் நுழைந்தாள்.

அஸீஸ் என்றால் பூனைக்கு ரொம்ப இஸ்டம். காலைச்சுற்றி வந்து வாலால் கூச்சங்காட்டும். சில சமயம் பாம்போ என பதறிக் காலை உதறி எழும்புவார். பின் அந்த ஸ்பரிசத்தை அனுபவித்துக் கொண்டே தலையையும் முதுகை யும் தடவிக்கொடுப்பார். 'சாப்புட்டியாஇ சுகமாரிக்கியா... எத்துன எலி புடிச்சா...' என்று கேட்பார். எல்லாவற்றுக்கும் நிமிர்ந்து பார்த்து 'மியா... மியா...' என்று தன் தாய்மொழியில் பதிலிறுக் கும். ஏனோ சல்மாவுக்கு மட்டும் இந்தப் பூனையைப் பிடிக்கமாட்டேங்கிறது.

வடக்கில் வாழ்ந்த காலத்தில் ஆடுஇ கோழிஇ நாய்இ பூனைக்கெல்லாம் வயிறு நிறையக் கொடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவாள். இடையில் ஆடு கத்தி னால் திண்ட கையோடு ஓடுவாள். அவ்வளவு மிருகாபிமானம். ஆனால்இ அகதியாக விரட்டப்பட்டு வந்ததன் பின்பு இப்படியாக மாறிப்போனாள். அகதி வாழ்வுஇ வறுமைஇ இரைச்சல்இ போஷாக்கின்மைஇ விரக்திஇ சமூக நெருக்குவாரங்கள்இ வசைஇ தாயக ஏக்கம்இ அந்நிய உணர்வுஇ இன்ன பிற...

பாவம் பூனை. போதாக்குறைக்கு பூனையை இனச்சுத்திகரிப்புச் செய்வதில் சின்ன மகனும் தாய்க்காரியுடன் சேர்ந்து கொண்டான். ஏதோஇ அஸீஸின் தடுத் தாட்கொள்ளலில் பூனை தப்பிப் பிழைத் துக் கிடக்கிறது.

இதற்கிடையில் இப்போது இரண்டு மூன்று நாட்களாக பூனைக்கு ஒரு புதுத் துணை கிடைத்திருக்கிறது. புடையன் பாம்பைப் பார்ப்பதுபோல பயங் கொள்ள வைக்கின்ற கறுப்புஇ மண் கலர் புள்ளிக்கடுவன். வெளியில் போய் அந்தக் கடுவனுடன் உரசிக்கொண்டு திரி கின்றது. பலநேரம் கடுவனே தேடிக் கொண்டு வீட்டுக்குள் வந்துவிடுகிறது. இருவரும் அருகருகில் படுப்பதும்இ மூக்கோடு மூக்கை உரசிக் கொள்வதும் எதோ திட்டம் தீட்டிக்கொண்டதுபோல திடீரென இருவரும் வீட்டைவிட்டு வெளிநடப்புச் செய்வதுமாக சில நாட்கள் கழிந்தன.

புத்தள உப்புவயலில் கூலிக்குப் போன அஸீஸ்இ உப்பு வெக்கையும் வியர்வையுமாக விருவிருத்துப் போய் வந்தார். 'வியர்வை வத்தட்டும் குளிப் போம்' என்று வாசலில் கிடந்த தென் னங்கட்டையில் அமர்ந்தார். கண்கள் பூனையின் தாயகத்தை நாடியது. காணவில்லை. பழந்துணி மாத்திரம் கிடந்தது. அங்குமிங்கும் பார்த்தார் அப்போதுதான் துள்ளித்திரிந்த பூனை நிறைமாதக் கர்ப்பிணியாய் புடைத்த தன் வயிற்றைத் தூக்கிக் கொண்டு வந்து பழந்துணியில் அமர்ந்து மெல்லச் சரிந்து படுத்தது.

அஸீஸின் முகத்தில் புன்னகை. 'ஆஹா... இன்னும் சில நாட்களில்...' என்ற அந்த எண்ணங்களோடு அஸீஸின் மனம் பின்னோக்கிப் பாய்ந்தது.

............................................................................................

யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி. பின்பக்க வாகை மர நிழலில் பரமானந்த வாத்தியார் கண்களையும் கைகளையும் ஆட்டி ஆட்டி பாடிக் காண் பிக்க அஸீஸ் முதலான மாணவர்கள் பாடினர்.

'வெள்ளை நிறத்தொரு பூனை... வெள்ளை நிறத்தொரு பூனை...

எங்கள் வீட்டில் வளருது கண்டீர்... எங்கள் வீட்டில் வளருது கண்டீர்..

பிள்ளைகள் பெற்றதப் பூனை... பிள்ளைகள் பெற்றதப் பூனை...

அவை பேருக்கொரு நிறமாகும். சாம்பல் நிறம் ஒருகுட்டி... கருஞ்சாந்து நிறமொரு குட்டி...
பாம்பின் நிறம் ஒரு குட்டி... வெள்ளை பாலின் நிறமொரு குட்டி...

எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரு தரம் அன்றோ...

பாரதிபோலவே சொல்லுக்கும் செய லுக்கும் பேதமில்லாமல் வாழ்ந்தவர் பரமானந்த வாத்தியார்.

அஸீஸின் மனக்கண்ணில் ஒஸ்மானி யாவும் பரமானந்த வாத்தியாரும் மாறி மாறித் தோன்றினர். சிதைந்துகிடக்கும் ஒஸ்மானியாவின் நிலை அகதி முகாமி லிருக்கும் அஸீஸுக்குத் தெரியாது. அஸீஸ் நிகழ்காலத்துக்கு வந்தார்.

அடுத்து வந்த சில நாட்களில் பூனை நான்கு குட்டிகளை ஈன்றது. அன்றைய தினம் அஸீஸ் வேலைக்குப் போக வில்லை. பஞ்சுப்பொதி போன்ற குட்டி களைத் தொட்டுப் பார்ப்பதும் தாயைத் தடவுவதுமாகத் தாதியானார். உணவுப் பொருட்களை அருகில் கொண்டுவந்து கொடுத்தார். சல்மாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. சல்மாவைக் காணுந்தோறும் 'நான் நான்கு பிள்ளைக ளின் தாயாக்கும்' என்ற இறுமாப்பில் சீறியது. அதன் பிரதேசத்தை அண்மித் தால் முறைத்துக் கொண்டு எழும்பியது.

வாரம் ஒன்று கழிந்தது. அஸீஸ் வேலைக்குப் போயிருந்தார். சல்மாவும் மகனுமாகச் சேர்ந்து பூனையை அணுகி ஒருவாறு தொட்டுத்தடவி நன்மை செய் பவர்கள் போல நடித்து பிரம்புக்கூடை ஒன்றுக்குள் தாயையும் குட்டிகளையும் ஏற்றி 'ஒருத்தருக்குந் தெரியாமக் கொண்டுபோய் சூரங்காட்டுக்குள்ள உட்டுப்போட்டு ஓடி வா...'

இரண்டே நிமிடத்தில் பூனையையும் குட்டிகளையும் அதன் தாயகத்திலிருந்து இனச்சுத்திகரிப்புச் செய்தனர். அடுத்த நிமிடம் பூனையின் இருப்பிடம்இ உண வுத் தட்டு அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அள்ளியெறிந்துவிட்டு அவ் விடத்தில் அடுக்குப் பானைகளைக் கொண்டுவைத்து அவ்விடத்தை ஆக்கிரமித்தாள்.

பிற்பகலானது. வீட்டில் ஏதோ ஒருகுறைஇ வெற்றிடம் இருப்பதுபோன்ற பிரம்மை சல்மாவுக்கு. பூனையும் குட்டி யும் இல்லாத வீடு களையிழந்துபோனது போன்ற ஒரு உணர்வு. அரக்கத்தனமாக வெளியேற்றிவிட்டேன். காடுகளிலும் மழைஇ வெயிலிலும் பால் கொடுக்கவும் முடியாமல்இ பால் குடிக்கவும் முடி யாமல் என்ன பாடுபடுகிறதோ. அந்தப் பிஞ்சுக் குட்டிகள் கத்துவது போல காதுக்குள் ஒரு உணர்வு. அது ஒரு துன்பி யல் சம்பவம் என்றுசொல்லி அதற்கொரு முற்றுப்புள்ளி வைத்துவிட முடியவில்லை.

அஸீஸ் வேலை முடிந்துவந்தார். நேரே பூனையின் இருப்பிடத்துக்குப் போனார். அது இடம்மாறி உருமாறி யிருந்தது.
'சல்மா... சல்மா...'

'...'

'சல்ல்ல்மா...'

'என்ன கூப்புட்டிங்களா?'

'பூனையும் குட்டியும் எங்க?'

'அது... அது... இவன்தான் கொண்டுபோய்...' என குற்றத்தை மகனின் தலையில் போட்டாள்.

'அடேய்...'

'இல்ல வாப்பா... உம்மாதான் சொன் னாங்க'

'இது என்ன அநியாயம். ஆண்டவன் பொறுப்பானா? அதுகள் என்ன தப்பு செஞ்சிது? நீங்கள் செய்கின்ற தப்புக் கெல்லாம் எத்துன தடவ துரத்தணும். எந்த வேகத்துல வெளியேத்தினிங் களோ... அதே வேகத்துல அதுகள குடி யேத்தனும். அப்பதான் ஆண்டவன் பொறுப்பான்.'

உத்தரவுக்காகக் காத்திராமல் மகன் கூடையுடன் சைக்கிளை எடுத்துக்கொண்டு பறந்தான். அருகில் நின்ற சல்மாவின் தோளில் அஸீஸ் கையைப் போட்டார்.

'என்ன சல்மா... ஏன் இப்புடியெல்லாம்?'

சல்மாவின் கலங்கிய கண்கள் வாசலை நோக்கியிருந்தன. பூனையின் வரவுக்காக ஏக்கத்துடன் காத்திருந்தன. மகன் கூடை நிறைய பூனைகளையும் குட்டிகளையும் நிரப்பிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். இருவரும் வாசலுக்கு ஓடினார்கள். கூடைக்குள் கைபோட்டு அள்ளி அணைத்துத் தடவினர். அப்ப டியே கொண்டுவந்து வாசல் படியில் விட்டனர். பஞ்சுப்பொதி போன்ற குட்டிகள் துள்ளிக்கொண்டோட வீடு பளிச்சென்றது.

தாய் வழிகாட்ட குட்டிகள் பின் தொடர்ந்து அவை தம் பூர்வீகப் பிரதேசத்தில் மீள் குடியேறும் அழகை அவ் அகதிக்குடும்பம் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோட பார்த்து ரசித்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். தாயகத்திலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்படுவதன் வலியும் மீள் குடியேறுவதில் உள்ள பேரானந்தமும் அவர்களுக்கல்லவா தெரியும்......!

No comments

Powered by Blogger.