Header Ads



களத்தில் குதித்தார் ஹரீஸ்


- நூருல் ஹுதா உமர் -


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது பெண் சுகாதாரப் பணியாளர்கள் தமது கலாசார மற்றும் மத ஆடைகளுடன் கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு உடனடி தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையிலான குழுவினர் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்தை இன்று சந்தித்து வலியுறுத்தினர்.


கொழும்பிலுள்ள வெளிவிவகார மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முஹம்மட் கபீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்பது பெண் சுகாதாரப் பணியாளர்கள் தமது மத மற்றும் கலாசார அடையாளத்துடன் கூடிய ஆடைகளை அணிந்து கடமையைப் பொறுப்பேற்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினை கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வருவதாக அமைச்சரிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


இந்த நிலைமை காரணமாக கல்முனை பிரதேசத்தில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பெரும் கவலை ஏற்பட்டுள்ளதுடன், இது நீண்டகாலமாக நிலவி வரும் தமிழ்–முஸ்லிம் நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையாக மாறி வருவதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், வைத்தியசாலை விடயத்தில் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் நிலைமை நாளுக்கு நாள் மேலும் மோசமடையும் அபாயம் காணப்படுவதாகவும், எனவே ஜனாதிபதியின் நேரடி கவனத்திற்கும் இந்த விடயத்தை கொண்டு சென்று, சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் அவசரமாக சுமூகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இந்த விடயம் தொடர்பில் இன்றைய அமைச்சரவையிலும் ஜனாதிபதி மட்டத்திலும் கலந்துரையாடி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


இலங்கையின் பல்வேறு அரச திணைக்களங்களிலும் சுகாதார நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள் தமது கலாசார மற்றும் மத அடையாளங்களுக்கு ஏற்புடைய ஆடைகளை அணிந்து கடமையாற்றுவது வழக்கமான விடயமாக உள்ள நிலையில், கல்முனை வைத்தியசாலையில் மாத்திரம் இவ்வாறானதொரு பிரச்சினை உருவாகியிருப்பது கவலைக்குரிய விடயம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.


எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி, அரசாங்கத்தின் தலையீட்டுடன் இந்த பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து, தமிழ்–முஸ்லிம் மக்களிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். 

No comments

Powered by Blogger.