Header Ads



மெஸ்ஸி கோல் அடிப்பதோ, அர்ஜென்டினா ஜெயிப்பதோ ஒரு பெரிய விசயமல்ல..


மெஸ்ஸி கோல் அடிப்பதோ, அர்ஜென்டினா ஜெயிப்பதோ ஒரு பெரிய விசயமல்ல. ஆனால் கேப் வெர்டே, நீங்கள் அடித்த ஒவ்வொரு கோலும் அற்புதம், நீங்கள் விளையாடிய அந்த 120 நிமிடங்களும் ஒரு மாயாஜாலம்.


இழப்பதற்கு எதுவுமே இல்லாத ஒருவன், தன் உயிரையே பணையம் வைத்து ஆடிய ஆட்டம் அது. உலக சாம்பியன்களை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக இருக்க விடாமல், 'ஜெயித்துவிட்டோம்' என்ற எண்ணமே வராதபடி 120 நிமிடங்களும் பதற்றத்திலேயே வைத்திருந்தீர்கள்.


எந்த நேரத்திலும் பதிலடி கொடுப்பார்கள் என்ற பயத்துடனேயே அவர்களை விளையாட வைத்த உங்களது ஆட்டம், வரலாற்றையும் தாண்டிய ஒன்று. ஜெயித்தவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால், தோற்ற உங்களைப் பற்றிப் பேசாமல் இருக்கவே முடியாது.


நீங்கள் திருப்பி அடித்த அந்த இரண்டு கோல்களுக்கு, அர்ஜென்டினா அடித்த மூன்று கோல்களை விட வலிமை அதிகம். உலகக் கோப்பைத் தொடருக்கு இவ்வளவு அழகு சேர்த்த கோல்கள் மிகக் குறைவுதான்.


வோசின்ஹோ, மெஸ்ஸியின் ஃப்ரீகிக்கை நீங்கள் காற்றில் பறந்து தடுத்த அந்தத் தருணம்! நீங்கள் செய்த அந்த 8 அசாத்தியமான சேவ்கள் (Saves)! பிரஸ் மீட்டில் சொன்னது போல, உங்கள் குழந்தைகளிடம் "நான் மெஸ்ஸியோடு விளையாடினேன்" என்று சொல்வதை விட, "மெஸ்ஸியின் கோல்களை கோல் போஸ்ட்டுக்குள் போக விடாமல் தடுத்து வெளியே அனுப்பினேன்" என்று வாழ்நாள் முழுக்கப் பெருமையாகச் சொல்லலாம்.


உலகக் கோப்பைத் தொடரிலிருந்து மட்டும்தான் நீங்கள் வெளியேறுகிறீர்கள். ஆனால், கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த பக்கங்களிலிருந்து உங்களை யாராலும் நீக்க முடியாது. போட்டியில் ஜெயித்தது சாம்பியன்களாக இருக்கலாம், ஆனால் ஆட்டத்தைப் பார்த்த மக்களின் இதயங்களை வென்ற சாம்பியன் கேப் வெர்டேதான்..⚽️

No comments

Powered by Blogger.