ஈரானை ஒரு சில நாட்களில் வீழ்த்தலாம் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகியுள்ளது - சஹீட்
விழுதுகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பாரசீக நாகரீகத்தின் பின்னணியைக் கொண்டது. அந்த நாட்டின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் செயல்பாட்டுத் திறனே அதன் முதன்மைப் பலம்.
மத விழுமியங்களின் அடிப்படையில் அனைவரையும் நம்புவதும், ஐக்கிய நாடுகள் சபையின் அழைப்பின் பேரில் எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதும் ஈரானின் ஒரு சிறந்த பண்பு.
"கடந்த காலங்களில் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நம்பிக்கைத் துரோகங்களே போர்க்காலங்களில் அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துகின்றன,
இஸ்ரேல் உலகிலேயே அதிகம் அச்சப்படும் நாடு ஈரான் தான் எனக் குறிப்பிட்ட அவர், ஒருமுறை ஈரான் விடுத்த எச்சரிக்கையை நினைவூட்டினார். "இஸ்ரேல் எங்களுடன் போர் தொடுத்தால், அடுத்த 10 முதல் 15 நிமிடங்களுக்குள் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேல் நீக்கப்படும்" என்று ஈரான் கூறியிருந்தது.
தனித்து நின்று ஈரானை வெல்ல முடியாது என்பதை உணர்ந்தே இஸ்ரேல் எப்போதும் அமெரிக்காவின் துணையை நாடுகின்றது.
குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் செல்வாக்கு இஸ்ரேலுக்குச் சாதகமான பல முடிவுகளை எடுக்க உதவியதாகவும் என். எம். சஹீட் மேலும் குறிப்பிட்டார்.
ஈரானை ஒரு சில நாட்களில் வீழ்த்திவிடலாம் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகியுள்ளது.
ஈரானிய உச்ச தலைவர் ஆயதுல்லா கமேனியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட நடவடிக்கைகள் ஈரானை பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, அந்நாட்டு மக்களை மேலும் ஒன்றிணைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அரசுக்கு எதிராக இருந்த போராட்டக் குழுக்கள் மற்றும் மாணவர்கள் கூட, தேசத்தின் இறையாண்மை என்று வரும்போது அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளமை அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
ஈரானின் உண்மையான பலம் தரைமட்டத்தில் இல்லை என்று குறிப்பிட்ட முன்னாள் தூதுவர், அந்நாட்டின் முக்கிய அம்சங்களைப் பட்டியலிட்டார் .
ஈரானின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் அணு ஆராய்ச்சி மையங்கள் பூமிக்குக் கீழே 1 முதல் 2 கிலோமீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வான்வழித் தாக்குதல்கள் மூலம் அழிப்பது எளிதல்ல.
காசாவில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய அதிநவீன நிலத்தடி சுரங்கத் தொழில்நுட்பங்கள் ஈரானால் வழங்கப்பட்டவை.
உலகத்தரம் வாய்ந்த இஸ்ரேலிய உளவுத்துறையால்கூட ஹமாஸின் மறைவிடங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதற்கு ஈரானின் இந்தத் தொழில்நுட்பமே காரணம்.
மேற்கத்திய ஊடகங்கள் கள நிலவரங்களைத் திரித்து வெளியிடுவதாகவும், ஈரானின் உண்மையான பதிலடித் திறனை உலகுக்கு மறைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஈரானின் தாக்குதல் திறன் தற்போது வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அச்சுறுத்தும் நிலைக்கு வளர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், போர் நீடித்தால் இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் நகரம், காசாவைப் போன்ற அழிவைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்கா தனது தூதரகங்களை மூடிவிட்டு அதிகாரிகளைத் திரும்ப அழைப்பதானது, ஈரானின் தற்போதைய வலிமையை அவர்கள் உணர்ந்துள்ளதையே காட்டுகிறது என்றும் என். எம். சஹீட் மேலும் தெரிவித்தார்.

Post a Comment