305 மில்லியன் ரூபா பெறுமதியான சிக்கரெட்டுக்கள் இன்று அழிப்பு
கடந்த நான்கு மாத காலப்பகுதியில் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 232,804,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை அனைத்தும் கெரவலப்பிட்டியவில் உள்ள கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி நிலையத்தில் வைத்து எரிக்கப்பட்டன.
அழிக்கப்பட்ட சிகரெட்டுகளின் சந்தைப் பெறுமதி சுமார் 305 மில்லியன் ரூபா ஆகும். இவை உள்நாட்டுச் சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தால், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய 271 மில்லியன் ரூபா வரி வருமானம் இழக்கப்பட்டிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான வந்தனா புஞ்சிஹேவா ஆகியோரின் மேற்பார்வையில் இடம்பெற்றது.
இலங்கைச் சுங்கச் சட்டங்களின்படி, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் எவரும் சிகரெட்டுகளைத் தம்வசம் வைத்திருப்பது அல்லது கொண்டு வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தடையை மீறிச் சிகரெட்டுகளைக் கொண்டு வரும் பயணிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் சுங்கத் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Post a Comment