September 13, 2021

"காழி நீதிமன்றங்கள்" விட்டுக் கொடுக்கவே முடியாத விவகாரம்

- அரபாத் ஸைபுல்லாஹ் -

இலங்கை முஸ்லீம்களாகிய எமக்குக் கிடைத்த ஓர் வரப்பிரசாதமே காழி நீதிமன்றங்கள்.

இது இன்று நேற்று உருவாக்கப்பட்டதல்ல. எமது முன்னோர்களால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே  வடிவமைக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்  தனியார் சட்டம் காலாண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டம் ஆள் சார் சட்டம், ஆதனச் சட்டம் என்ற இரு பிரிவுகளைக் கொண்டது.

காழி நீதிமன்றங்கள் ஆள் சார் சட்டம் என்ற வரையறைக்குள் உள்ளடங்குகின்றது.

முஸ்லிம் தனியார் சட்ட வரலாறு 500 வருடங்களையும் கடந்து செல்கின்றது.

S.G perera எழுதிய History Of Ceylon என்ற நூலின் முதல் பாகத்தில் " எட்டாம் நூற்றாண்டில் (அதாவது இஸ்லாம் தோன்றி 200 வருடங்களுக்குப் பின்னால்) கொழும்பு, பேருவலை,காலி போன்ற கரையோர முஸ்லீம்கள் தங்கள் திருமண விவகாரங்கள் மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிணக்குகளை தீர்ப்பதற்காக, அவர்களுக்கென்றே கொழும்பில் ஷரீஅத் நீதிமன்றம் ஒன்று காணப்பட்டது" என்பதாக குறிப்பிடுகிறார். 

மேலும் Professors Lakshman Marasinghe மற்றும் Sharya Scharenguivel அவர்கள் எழுதிய Compilation of Selected Aspects of the special laws of Sri Lanka என்ற நூலிலும் கொழும்பில் காணப்பட்ட ஷரீஅத் நீதிமன்றம் தொடர்பாக  எழுதுகிறார்கள்.  

Lorna Dewaraja அவர்கள் எழுதிய ஆயிரம் வருட வரலாறு கொண்ட இலங்கை முஸ்லீம்கள்  The Muslims of Sri Lanka: One Thousand Years of Ethnic Harmony, 900-1915 என்ற நூலிலும் இதனை வரலாற்று ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துகிறார்.


அதுமட்டுமின்றி போர்த்துக்கேயர் இலங்கை வந்த போது கரையோர முஸ்லீம்களே அவர்களுக்கெதிராக முகம் கொடுத்தனர். அப்போது அவர்களை போர்த்துக்கேயர் கண்டிக்கு துறத்தினர். அந்த வேளையில் கண்டி  இராஜ்யத்தின் மன்னர்கள் கூட, தஞ்சம் புகுந்ந கரையோர முஸ்லீம்களின் தனியார் சட்டத்தில் கைவைக்கவுமில்லை. சமயம் சார்ந்த பல சலுகைகளையும் வழங்கினர் என்று வரலாறு கூறுகின்றது. 

அதனைத் தொடர்ந்து கண்டிக்கு வந்த முஸ்லீம்கள்  மீண்டும் கரையோரம் திரும்பினர். அப்போது ஒல்லாந்தரின் ஆட்சிக் காலம்.

அவ் வேளையில் இலங்கையில் இருந்த ஒல்லாந்து கவர்னர் பதாவியாவில் இருக்கும் அவர்களின் தலைமையகத்திற்கு எழுதிய கடிதத்தில் "இலங்கை முஸ்லீம்கள் தங்கள் திருமணம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு, அவர்களுக்கென்றே  சமயம் மற்றும் கலாசாரம் சார்ந்த சில சட்டங்கள்  இருக்கின்றன. அவற்றை ஒருநாளும் மாற்ற முடியாது. எனவே அதனை கருத்தில் கொண்டு நீங்கள் சட்டமேற்றுங்கள்" என்று கூறப்பட்டது. இன்றுவரை அந்தக் கடிதங்கள் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றன.   

பின்னர் அதனை கருத்தில் கொண்டு 8 ஆம் இலக்க சட்டம் "முஹம்மதியன் கோர்ட்" என்ற சட்டக் கோவை பதாவியாவிலிருந்து இலங்கை முஸ்லீம்களுக்காக 1770 இல் அனுப்பி வைக்கப்பட்டது. 

பின்னர் 1801 ஆங்கிலேயர் இலங்கையை கைப்பற்றிய போதும் முஸ்லீம்களின் சட்டங்களையும் தாம் ஏற்றுக் கொண்டதாக பிரகடனம் செய்தனர்.

ஆங்கிலேயரால் 1806 மற்றும் 1833 இல் யாப்புச் சீர திருத்தங்கள் வந்தபோதும் முஸ்லீம் தனியார் சட்டத்தில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை.

இறுதியாக 1929 இல் டி பி ஜாயா, நீதியரசர் அக்பர் போன்றவர்களைக் கொண்ட குழு முஸ்லீம் தனியார் சட்டத்தை நெறிப்படுத்தினார்கள்.


இந்த வரலாற்றுப் பின்னணிகளை நோட்டமிடும் போது இலங்கை முஸ்லீம்கள் தங்களது தனித்துவ அடையாளங்களை எப்போதும் விட்டுக் கொடுக்கவில்லை என்ற செய்தி புலனாகின்றது.

எனவே இவ்வாறு மாபெரும் வரலாற்றுப்  பின்னணியால் பல நூறு ஆண்டுகள், எங்கள் முன்னோர்களால் பாதுகாக்கப்பட்ட இச் சட்டங்களை ஒரு வார்த்தையால் துடைத்தெறிய முடியுமா?

முஸ்லிம் தனியார் சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமே தவிர இல்லாதொழிக்க வேண்டும் என்பது எவரினதும் உட்கிடக்கை அல்ல.

குறிப்பாக காழி நீதிமன்றங்கள் இல்லாமலாக்கப்படும் என்ற நீதி அமைச்சரின் முடிவு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகின்றது.

இது விட்டுக் கொடுக்கவே முடியாத விவகாரம். இதனை நாம்  விட்டுக் கொடுப்பது வரலாற்றுத் தவறாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.  

குறித்த விடயம் தொடர்பாக முஸ்லீம் அமைச்சர்கள், சிவில் அமைப்புக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லீம் பண்பாட்டளுவல்கள் திணைக்களம் என அனைவரும் இணைந்து, இதற்கான ஓர் ஆக்கப்பூர்வமான தீர்வொன்றை பெறுவது தார்மீகக் கடமையாகும்.

அத்தோடு முஸ்லீம்களாகிய நாம் எமது உரிமைகளை தொடர்ந்தும்  பாதுகாப்பதற்காக இறைவனிடம் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் அவசியமாகும்.

9 கருத்துரைகள்:

இனி காழி நீதிமன்றங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான சரியான மிக அவசரமாக செய்ய வேண்டிய நடவடிக்கை உடனடியாக இதனை இல்லாமல் செய்வதால் முஸ்லிம்களின் அடிப்படை உரிமை மீறப்படுகின்றது என்பதை சகல ஆதாரங்களுடன் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்து அமைச்சரவையின் தீர்மானத்தை ரத்துச் செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிக்ைக விடுப்பதாகும். அதுதவிர மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிகளும் உரிய பலனைத் தரமாட்டாது என்பது எமது அண்மைக்கால அனுபவங்கள் சரியாக நிரூபிக்கின்றன. எனவே, முஸ்லிம் புத்தி ஜீவிகள், கல்விமான்கள்,சட்டத்தரணிகள், செல்வந்தர்கள் உ்றபட அனைவரும் ஒன்றாக இணைத்து முயற்சி செய்தால் இதனைச் சாதிக்கலாம்.

சிறந்த தகவல் பதிவு, இதை நீதி அமைச்சருக்கு புரியவைக்க வேண்டும் .அவர் பேரினவாதிகளை திருப்திப்படுத்தாமலிருக்க

காலத்திற்கு தேவையான கட்டுரை. அனைவரும் அறிந்திருக்க வேண்டிய முஸ்லிம்களின் வரலாறு. அன்று முஸ்லிம்கள் போராடி பெற்ற உரிமைகளை இன்றுள்ள முஸ்லிம் சுயநலவாதிகள் முஸ்லிம்களின் உரிமைகளை இல்லாது ஒழிக்க பெரும்பான்மையுடன் கைகோர்த்து செயல்படுகின்றது மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

மிகவும் காத்திரமான ஆக்கம்

மிகவும் காத்திரமான ஆக்கம்

காழி நீதிமன்றங்கள் என ஒரு சட்டம் இலங்கைச் சட்டத்தில் இதுவரை இல்லை. எனவே இல்லாத ஒன்றை இல்லாமலாக்குவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.அதற்குப்பதிலாக காழி அமைப்பு முறைமைதான் இதுவரை நடைமுறையில் உள்ளது. இந்த காழிமுறைமை காரணமாகத்தான் காழிவிசாரணைகள் அங்கும் இங்கும் ஒரு ஒழுங்கமைப்பு இன்றி நடைபெறுவதுடன் தனிநபரில் முழுமையாகத் தங்கியிருக்கும் ஒரு முறைமை பின்பற்றப்படுகின்றது. எனவே காழிநடைமுறையை நீக்கி முஸ்லிம் தனியார் சட்டங்களில் சில திருத்தங்களுடன் அவை மாவட்ட நீதிமன்றங்களின் கீழ் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்கள் விசாரிக்கப்படஉள்ளன. அதாவது முஸ்லிம் தனியார் சட்டங்களில் சில மாற்றங்களுடன் அவை மாவட்ட நீதிமன்றங்களின் கீழ் விசாரிக்கப்படும். அவ்வளவுதான்.

Absolutely Right. But it seems, everybody including Parliamentarians, Civil Organisations, Religious Organisations and other Responsible Members of the Community seem to be sleeping.

What a Pathetic State of Affairs in the Community.

மக்களக்காகத்தான் சட்டங்களே தவிர சட்டஙகளுக்காக மக்கள் அல்ல.

The present parliamentarians(Muslim) never took interest in the Muslim affairs. They only prioritize for their selfish gains.There were so many problems faced by Muslim community except very very few spoke,others kept mum.They can be very good ambassadors to represent muslims and explain about our religious rights, but they never did.This is the law of the almighty Allah mentioned in the Quran.How could they be silent? Utter waste.

Post a Comment