Header Ads



காபூல் விமானநிலையம் அருகே 2 தாக்குதல்கள் - அமெரிக்கர்கள் உட்பட பலரும் மரணிப்பு - பலர் காயம்


காபூலில் இன்று -26- மாலையில் நடத்தப்பட்ட இரு தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 பேர் பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகலாம் என் எச்சரிக்கிறார், அந்நாட்டில் இருக்கும் பிபிசி செய்தியாளர் சிக்கந்தர் கெர்மானி.

அங்கு பலியானவர்களின் சடலங்கள் இடம்பெற்ற காணொளியை பார்க்கும்போது, அதிகாரிகள் தெரிவிக்கும் எண்ணிக்கையை விட பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என தெரிய வருகிறது.

அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் பலருக்கு காயம்: பென்டகன்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலைய வளாகத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல் வந்துள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

அப்பி வாயில் பகுதியில் ஒரு தாக்குதலும், அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி தூரத்தில் உள்ள பேரன் விடுதி அருகே மற்றொரு தாக்குதலும் நடந்துள்ளதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி வாஷிங்டனில் தற்போது நடத்தி வரும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

காபூல் விமான நிலைய வாயிலை விட்டு விலகியிருக்க பொதுமக்களுக்கு உத்தரவு

காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியை விட்டு விலகியிருக்குமாறு அங்குள்ள பொதுமக்களுக்கு பாதுகாப்புப்படையினர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த வாயில் பகுதியின் வெளிப்புற பாதுகாப்பை தாலிபன்களும், உள்புற பாதுகாப்பை அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படையினரும் மேற்காண்டுள்ளனர்.

இந்த வாயில் பகுதியில்தான் ஆப்கானை விட்டு வெளியேற தகுதி பெற்ற ஆப்கானியர்கள், வெளிநாட்டுப் பயணிகள் காத்திருக்கின்றனர். மற்றவர்கள் வேறு வாயில் பகுதியில் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

முறையான கடவுச்சீட்டு, விசா போன்ற ஆவணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இந்த வாயில் பகுதியில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால், இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

No comments

Powered by Blogger.