Header Ads



அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதை தடுக்கக் கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல்


அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள Selendiva Investments மற்றும் Selendiva Leisure Investments ஆகிய நிறுவனங்களுக்கு அரச சொத்துக்களை வழங்குவதையோ அல்லது அவற்றை குத்தகைக்கு வழங்குவதையோ தடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி தொழில்சார் பொறியியலாளரான கபில ரேணுக பெரேரா இன்று -30- உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அமைச்சரவையின் அனுமதியுடன் அரசுக்கு சொந்தமான மற்றும் அரசுக்கு பங்குடைமை கொண்ட நிறுவனங்களை, குறித்த இரண்டு நிறுவனங்களுக்கும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச சொத்துக்களை ஏனைய நிறுவனங்களுக்கு வழங்குவது அரசியலமைப்பு மற்றும் அரச கொள்கையை மீறுவதாக அமையும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனூடாக நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், தாம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

தமது மனுவை பரிசீலனை செய்வதற்காக விசேட நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் மனுதாரர் , பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சின் செயலாளர் S.R.ஆட்டிகல, கணக்காய்வாளர் நாயகம், Selendiva Investments நிறுவனம், Leisure Investments நிறுவனம், நிறுவன பதிவாளர் நாயகம், Canwill Holdings தனியார் நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, அமைச்சரவையின் செயலாளர், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் நபர்கள் அடங்கலாக 19 பெயர்கள் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

No comments

Powered by Blogger.