Header Ads



5000 ரூபாய் அரச நிவாரண கொடுப்பனவு என்ற, அறிவித்தலானது அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரம் - உதயகுமார் Mp


நாட்டில் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளதால் தற்போது வாழ்வாதாரத்தை இழந்து அல்லலுறும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

பயணக் கட்டுப்பாட்டினால் வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கு 5000 ரூபாய் அரச நிவாரணம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்த போதும் இந்த நிவாரணம் உரியவர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. 

சமூர்த்தி பெறுநர்களுக்கு மாத்திரமே பெரும்பாலும் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ள போதும் இந்தத் தொகை சமுர்த்தி பெறுநர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

இவ்வாறான நிலையில் அன்றாடம் தொழில் செய்து அதன் மூலம் வருமானம் தேடி தமது குடும்பத்தை வழி நடத்தி வந்த இலட்சக்கணக்கானோர் இன்று பயண கட்டுப்பாட்டு காரணமாக எவ்வித வருமானமும் இன்றி வறிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இவ்வாறானவர்களுக்கு இதுவரை அரசாங்கத்தின் 5,000 ரூபாய் நிவாரணக் கொடுப்பனவு கிடைக்கவில்லை என்பதை உறுதியாக கூற முடியும். 

தோட்டப் பகுதிகளைப் பொறுத்தவரையில் ஒரே குடும்பத்தில் பல உப - குடும்பங்களும் உள்ளன. அரச நிவாரண கொடுப்பனவில் இந்த உப குடும்பங்களும் உள்ளடக்கப்பட வேண்டும். 

5000 ரூபாய் அரச நிவாரண கொடுப்பனவு என்ற அறிவித்தலானது அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரம் என்று மக்கள் தற்போது கூறத் தொடங்கியுள்ளனர். 

எனவே தொடர்ந்து நாடு முடக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு அரசாங்கம் பாரபட்சமின்றி நிவாரண கொடுப்பனவை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.